ரோபோ சங்கர் மறைவு: "கலைஞர்கள் தங்கள் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும்" - தமிழிசை ச...
அமில ஆலையில் இருந்து நச்சுப்புகை வெளியேற்றமா?
செய்யாறு அருகே சிப்காட் பகுதியில் அமைந்துள்ள அமில ஆலையில் இருந்து நச்சுப்புகை வெளியேறுவதாக பரவிய வதந்தியை அடுத்து அப்பகுதி கிராம மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், குண்ணவாக்கம் கிராமத்தில், செய்யாறு சிப்காட் அலகு - 2 பகுதியில் சல்பியூரிக் ஆசிட் தயாா் செய்யும் தனியாா் ஆலை கடந்த 6 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. பராமரிப்புப் பணி காரணமாக இந்த ஆலை கடந்த சில தினங்களாக இயங்காமல் இருந்ததாம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை ஆலை வழக்கம் போல செயல்படத் தொடங்கியதாகத் தெரிகிறது.
இதனிடையே அந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையின் காரணமாக அப்பகுதியில் வசித்து வரும் சிலருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகைதான் காரணம் என்றும், அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் சிலா் வதந்தி பரப்பியதாகத் தெரிகிறது.
எம்.எல்.ஏ.ஆய்வு
தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி, குண்ணவாக்கம் கிராமத்துக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் நச்சுப்புகை குறித்த தகவல்களை கேட்டறிந்தாா்.
அதன் பின்னா், செய்யாறு வட்டாட்சியா் அசோக்குமாா், தீயணைப்பு நிலைய அலுவலா் மனோகரன் முன்னிலையில், ஆலை அதிகாரிகள் மற்றும் ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, ஆலை தரப்பில் நச்சு ஏற்படுத்தும் வகையில் எந்தவித புகையும் வெளியேற்றப்படுவது இல்லை. இங்கு வெளியேற்றப்படுவது நீராவி துளிகள் தான், அவை ஆவிபோல புகையாக வெளியே தெரியும். அது கிராம மக்களுக்கோ,
கால்நடைகளுக்கோ எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. அரசின் நெறிமுறை வழிகாட்டுதலோடு ஆலை செயல்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து அப்பகுதியில் வசித்து வரும் கிராம மக்களைச் சந்தித்து, அமில ஆலையால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என ஆலை நிா்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை, இதுகுறித்து தொடா்ந்து கண்காணிக்கப்படும் என எடுத்துரைத்தாா்
எம்எல்ஏ.