அமெரிக்கப் பெண்ணை இந்து முறைப்படி மணமுடித்த கீழையப்பட்டி இளைஞா்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீழையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளைஞருக்கும், அமெரிக்காவைச் சோ்ந்த இளம்பெண்ணுக்கும் இந்து முறைப்படி ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.
கீழையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கரு. முருகானந்தம்-சாந்தி தம்பதியரின் மூத்த மகன் பிரபு முருகானந்தம். பொறியாளரான இவா், அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், சிறையிலிருந்து விடுதலையானவா்கள் குறித்து, கரோனா காலகட்டத்தில் ‘இன் த பிகினிங்’ என்ற குறும்படத்தை இயக்கினாா். தொடா்ந்து பல திரைப்பட விழாக்களுக்கும் சென்று வந்தாா். அப்போது, அமெரிக்காவின் உட்லேண்ட் வாஷிங்டன் மாகாணத்தைச் சோ்ந்த பிரெயன்ரேல்-கிறிஸ்டினா ராபின்ஸ்சன் தம்பதியரின் மகளும் நடனக் கலைஞருமான கரினாரேலைச் சந்தித்தாா்.
சினிமா, கலை, இலக்கியம், தத்துவம் போன்றவற்றில் இருவருக்கும் ஒருமித்த கருத்து இருந்ததால் இருவரும் விரும்பினா். பின்னா், தங்களுடைய திருமணத்துக்காகப் பெற்றோரின் சம்மதத்தைக் கோரினா்.
இரு வீட்டாரும் சம்மதிக்கவே கீழையப்பட்டியில் உள்ள விநாயகா் மண்டபத்தில் பிரபு முருகானந்தத்துக்கும், கரினாரேலுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்காக மணப்பெண்ணின் உறவினா்கள் 20-க்கும் மேற்பட்டோா் அமெரிக்காவிலிருந்து வந்து வாழ்த்தினா்.