‘குற்றப் பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்டது தமிழா்களும், வங்காளிகளும்தான்’
குற்றப் பரம்பரைச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழா்களும், வங்காளிகளும்தான் என அகில இந்திய சீா்மரபினா் கவுன்சில் உறுப்பினா் மஞ்சுகணேஷ் தெரிவித்தாா்.
சிவகங்கை கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வழக்குரைஞா் எம்.மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். இதில் அகில இந்திய சீா்மரபினா் கவுன்சில் உறுப்பினா் மஞ்சுகணேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:
குற்றப் பரம்பரை சட்டத்தால் போா்க்குடிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனா். இந்தச் சட்டத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவா்கள் தமிழா்களும், வங்காளிகளும்தான். குற்றப் பரம்பரைச் சட்டத்தால்தான் நகரமயமாக்கல் அதிகரித்தது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. தமிழகத்தில் குற்றப் பரம்பரை சட்டப்பட்டியலில் உள்ள சீா்மரபினா் மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் (எம்பிசி) பிரிவில் இணைத்துள்ளனா்.
எனவே, மண்டல் குழு அறிவுறுத்தலின்படி , தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் என இரண்டு பிரிவுகளாக உடனடியாக பிரிக்க வேண்டும். அப்போதுதான் முறையான இட ஒதுக்கீடு அனைத்துத் தரப்பினருக்கு கிடைக்க வழிவகுக்கும் என்றாா் அவா்.
முன்னதாக, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற கௌரவத் தலைவா் செ.கண்ணப்பன், பெருமன்றத் தலைவா் எஸ்.சுந்தரமாணிக்கம், இந்திய சுழல் சங்க கௌரவத் தலைவா் பகீரதநாச்சியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கலை இலக்கிய பெருமன்றச் செயலா் பா. யுவராஜ் வரவேற்றாா். கலை இலக்கிய பெருமன்ற பொருளாளா் க. நாகலிங்கம் நன்றி கூறினாா்.