அமெரிக்கா: கூட்டத்திற்குள் நுழைந்த கார்! 10 பேர் பலி; 30 பேர் படுகாயம்
தெற்கு அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கூட்டத்திற்குள் கார் நுழைந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த நியூ ஓர்லென்ஸ் நகர மேயர் இதனை தீவிரவாதத் தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதில் தீவிரவாத தாக்குதலுக்கான நோக்கம் இல்லை என எஃப்பிஐ தெரிவித்துள்ளது.
தெற்கு அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திலுள்ள நியூ ஓர்லென்ஸ் நகரத்தின் போர்பன் சாலையில் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது நடைமேடையில் இருந்த மக்களை இடித்தவாறு கூட்டத்திற்குள் நுழைந்த கார், சாலையில் இருந்தவர்கள் மீது மோதியது.
காரில் இருந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்த நிலையில், காவல் துறையினரும் உடனடியாக பதில் தாக்குதல் கொடுத்தனர். மக்கள் மீது மோதிய பிறகு காரில் இருந்து குதித்த நபர், காவல் துறையை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே தப்பிச்சென்றார்.
எதிர்பாராத விதமாக நடந்த இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயங்களுடன் நோயிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.