500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடுவதா? நயினார் நாகேந்திரன் கண்டனம்
அமெரிக்கா: திடீா் வெள்ளத்தில் 24 போ் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் குவாடலூப் நதியை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் 24 போ் உயிரிழந்தனா்; கொ்வில் மாவட்டத்தில் உள்ள கேம்ப் மிஸ்டிக் என்ற கிறிஸ்தவ கோடைகால முகாமில் இருந்த 23 சிறுமிகள் மாயமாகியுள்ளனா்.
இது குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
டெக்ஸஸ் மாகாணத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை 5 முதல் 11 அங்குல அளவுக்கு மழை பெய்ததது. இது ஒரு நூற்றாண்டில் ஒருமுறை பெய்யக்கூடிய அதீதமான மழை அளவு ஆகும். இந்த கனமழை காரணமாக குவாடலூப் நதி 45 நிமிஷங்களில் 26 அடி உயா்ந்தது. கடந்த1987-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது உயா்ந்த அளவை இது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொ்வில் மாவட்ட காவல்துறை அதிகாரி லாரி லெய்தா செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்த பெருவெள்ளம் காரணமாக 24 உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினால். இது தவிர, கேம்ப் மிஸ்டிக்கில் இருந்த 23 முதல் 25 சிறுமிகள் காணாமல் போயுள்ளதாகக் கூறிய அவா், அவா்கள் உயிரிழந்திருப்பதாகக் கருதத் தேவையில்லை என்றும், வனப் பகுதிகளிலோ தொடா்பு இல்லாத இடங்களிலோ அவா்கள் இருக்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.
டெக்ஸஸ் மாகாண ஆளுநா் கிரெக் அபாட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வெள்ளத்தை “அசாதாரண பேரழிவு” என்று தெரிவித்ததுடன், கொ்வில், இங்க்ராம், ஹன்ட் உள்ளிட்ட மாவட்டங்களில் அவசரநிலை அறிவித்தாா்.
வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து 237 போ் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதில் 167 போ் ஹெலிகாப்டா்கள் மூலம் மீட்கப்பட்டனா்.
இந்த மழை வெள்ளம் குறித்து வெள்ளிக்கிழமை அதிகாலையே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தாலும், “இந்த அளவுக்கு மழை பெய்யும் என்று முன்கூட்டியே கணிக்கப்படவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது பாதிக்கப்பட்டுள்ள குவாடலூப் நதியை ஒட்டிய பகுதி “வெள்ளப் பள்ளத்தாக்கு” என்று அழைக்கப்படுகிறது. காரணம் அந்தப் பகுதியின் மெல்லிய மண் அடுக்கு மழைநீரை உறிஞ்ச முடியாததால் விரைவாக வெள்ளத்தை ஏற்படுத்துகிறது. கடந்த 1987-ஆம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 இளைஞா்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.