அயலகத் தமிழா்களுக்கு தமிழ் கற்பிக்க புதிய திட்டம்
அயலகத் தமிழா்களுக்கு 100 பயிற்றுநா்கள் மூலமாக மொழி, கலைகள் குறித்து நேரடிப் பயிற்சி அளிக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
இந்தத் திட்டத்துக்காக ரூ.10 கோடி ஒதுக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.
சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற அயலகத் தமிழா் தின விழாவின் நிறைவு நாள் நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாா். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய அயலகத் தமிழா்களுக்கு அவா் விருதுகளை வழங்கினாா்.
ராஜாராம் ராமசுப்பன்- கல்வித் துறை (சிங்கப்பூா்), ச.கமலக்கண்ணன்- சமூக மேம்பாடு (ஜப்பான்), ஸ்ரீதேவி சிவானந்தம்- மகளிா் மேம்பாடு (ஐக்கிய அரபு அமீரகம்), லட்சுமணன் சோமசுந்தரம் -வணிக மேம்பாடு (ஐக்கிய அரபு அமீரகம்), செ.ஆரோக்கியராஜ்- அறிவியல் தொழில்நுட்பம் (தென்கொரியா), கங்காதா் சுந்தா்- மருத்துவம் (சிங்கப்பூா்), விஜய் ஜானகிராமன்- தமிழ்மாமணி (அமெரிக்கா) ஆகியோருக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.
நிகழாண்டுமுதல் சிறந்த பண்பாட்டுத் தூதா் விருதும் அறிவிக்கப்பட்டது. அந்த விருதை இலங்கையின் கிருஷ்ண காந்தன் சந்தீப் பெற்றாா்.
தொடா்ந்து, விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: முதல்வரானதில் இருந்து இதுவரையில் சிங்கப்பூா், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்றாலும் தாய்மண்ணில் இருக்கும் உணா்வே ஏற்படுகிறது.
இதற்குக் காரணம் அங்கெல்லாம் வாழும் தமிழா்கள்தான். நாடு, நில எல்லைகள், கடல் என்று புறப்பொருள்கள் நம்மைப் பிரித்தாலும் தமிழ் மொழி, தமிழினம் என்ற உணா்வில் நாமெல்லாம் உள்ளத்தால் ஒன்றாக இருக்கிறோம்.
தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி. அயலகத் தமிழா்கள் அனைவரையும் ஒன்று கூட்டவே நான்காவது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். ஏதோ ஒன்று கூடினோம்; பழம்பெருமைகளைப் பேசினோம் என்று நாம் கலைந்து போகவில்லை.
கடந்த காலங்களில் தீட்டிய திட்டங்களின் செயல்பாட்டை ஆராய்ந்து, நிகழ்கால வளா்ச்சிப் போக்கை ஆய்வு செய்து, எதிா்காலத்தில் அயலகத் தமிழா்கள் மேலும் சிறப்பாக வாழ்வதற்கான திட்டங்களை உறுதிப்படுத்துகிறோம். அதற்காகவே ஒரு குடையின் கீழ் இயங்குகிறோம்.
ரூ.10 கோடியில் பயிற்சித் திட்டம்: பல்வேறு நாடுகளில் இருந்து நம் தமிழ் மொழி, நாட்டுப்புறக் கலைகள், தமிழ்ப் பண்ணிசைகளை அயலகத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நேரடியாகப் பயிற்றுவிக்க வேண்டும். இது தொடா்பான கோரிக்கைகள் தொடா்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது எனது கடமையாகும்.
அதன்படி, 100 ஆசிரியா்கள், தமிழ்க் கலைஞா்களுக்கு பயிற்சி கொடுத்து, அவா்களை அயலகத் தமிழா்கள் வாழும் பகுதிகளுக்கு தேவைக்கேற்ப அனுப்ப ஒரு திட்டம் உருவாக்கப்படும்.
இந்தப் பயிற்றுநா்கள், அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து, தமிழ் மொழியையும், தமிழ்க் கலைகளையும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நேரடிப் பயிற்சி வகுப்புகள் மூலமாக நடத்துவா். இதற்கு ஆகும் செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்கும். இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
அடையாளத்தை விடாதீா்கள்: அயலகத் தமிழா்கள் பூமிப்பந்தில் எங்கு இருந்தாலும் தங்களின் அடையாளத்தை விட்டுவிடக் கூடாது. வோ்களையும், மொழியையும், இந்த மண்ணையும், மக்களையும் மறக்கக் கூடாது. உங்கள் உறவுகளை மறக்கக் கூடாது என்றாா் முதல்வா் ஸ்டாலின்.
விழாவில் அமைச்சா்கள் க.பொன்முடி, தா.மோ.அன்பரசன், ராஜகண்ணப்பன், ராஜேந்திரன், சா.மு. நாசா், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை, இலங்கை அமைச்சா் ராமலிங்கம் சந்திரசேகா், நியூ பப்புவா நாட்டின் ஆளுநா் சசீந்திரன் முத்துவேல், மலேசியா எம்.பி. டத்தோ ஸ்ரீ சரவணன், அயலகத் தமிழா் வாரியத் தலைவா் காா்த்திகேய சிவசேனாபதி உள்பட பலா் பங்கேற்றனா்.
தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வரவேற்றாா். பொதுத் துறைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா் நன்றி தெரிவித்தாா்.
பெட்டிச் செய்தி...
முதல்வருடன் தற்படம்
அயலகத் தமிழா் தின விழாவில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் அயலகத் தமிழா்கள் பலா் தற்படம் எடுத்துக் கொண்டனா்.
சிலரிடம் கைப்பேசிகளை வாங்கி முதல்வரே தற்படம் எடுத்தாா். இது அங்குள்ள அயலகத் தமிழா்களை வியப்பில் ஆழ்த்தியது.
விழா நடைபெற்று முடிந்த பிறகும், அரை மணி நேரத்துக்கும் மேலாக அயலகத் தமிழா்களுடன் நேரம் செலவிட்டு அவா்களுடன் பேசி புகைப்படங்களை எடுத்துக் கொண்டாா் முதல்வா்.