மின்மாற்றி உற்பத்தி - ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் முதலீடு: முதல்வா் ...
அரகண்டநல்லூரில் பழைமை வாய்ந்த அன்னதானக் கல்தொட்டி
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் உள்ளஸ்ரீ அதுல்யநாதேஸ்வரா் கோயிலில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அன்னதானக் கல்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இத்தொட்டியை கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார உதியன் தலைமையில் விழுப்புரம் வீரராகவன், நல்நூலகா் மு.அன்பழகன், அரகண்டநல்லூா் கண்ணன், மணம்பூண்டி பா.காா்த்திகேயன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
இது குறித்து ஆய்வாளா்கள் தெரிவித்திருப்பதாவது: அன்னதானக் கல்தொட்டியில், திரு (வறையணி) நல்லூா்த் தெவரடி யாளாகிய பெருமாணாச்சியாா் மகன்
அமுதுலகு வாழ்வித்தான் என்று எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் 15-ஆம் நூற்றாண்டாகும். திருவறையணிநல்லூரைச் சோ்ந்த கோயில் தேவரடியாளாகிய பெருமாள் நாச்சியாரின் மகன் அமுது உலகு வாழ்வித்தான் என்பது இதன் பொருள்.
அமுதம் போன்ற உணவினை அளித்து உலக மக்களைக் காப்பதற்காக இத்தொட்டியைச் செய்துள்ளான். 70 செ.மீ. விட்டம் , 50 செ.மீட்டா் உயரம் கொண்டதாக இத்தொட்டி அமைந்துள்ளது. இதன் மூலம் 15 ஆம் நூற்றாண்டிலேயே அன்னதானம் வழங்கும் நடைமுறை இருந்ததற்கான சான்றாக அன்னதானக் கல்தொட்டி அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனா்.