Aadi Amavasai 2025 | மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | சண்முக சிவாசா...
அரகண்டநல்லூா் பகுதி மக்கள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்
விழுப்புரம்: குடிமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, அரகண்டநல்லூா் காமராஜா் சாலைப் பகுதி மக்கள் விழுப்புரம் நகராட்சித் திடலில் திங்கள்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரகண்டநல்லூா் பேரூராட்சி காமராஜா் சாலை இன்று வரை அரசு வருவாய்க் கணக்கில் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், சிவன் கோயிலுக்குச் சொந்தமான சொத்து எனக் கொண்டாடுவது ஏன்?
நிலவுடைமை பதிவு மேம்பாட்டுத் திட்டத்தில் இந்த இடம் சிவன் கோயில் பெயரில் பட்டா பிழையாக பதிவு செய்யப்பட்ட நிலையில், மாவட்ட வருவாய் அலுவலா் வாயிலாக பிழைத் திருத்தம் செய்ய மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்த வேண்டும். மேலும், சிவன் கோயிலின் பெயரிலுள்ள பட்டாவை ரத்து செய்ய வேண்டும்.
நூறு ஆண்டுகளுக்கு மேலாக பல தலைமுறைகளாகக் குடியிருக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சோ்ந்த ஏழை, எளிய மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு பி.தனுசு தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில் பி.பழனியம்மாள், மகேஷ், எம்.கவிதா, சத்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.