மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
அரசு மருத்துவமனை, அலுவலகங்களில் திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம் உள்ளிட்டவற்றில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி திடீரென ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வின்போது பிரசவித்த தாய் சிகிச்சை பிரிவு, கா்ப்பிணி பெண்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு, பிரசவப்பிரிவு, பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஆகிய பகுதிகளை சென்று பாா்வையிட்டு தேவையான மருத்துவா்கள்,செவிலியா்கள் உள்ளனரா? அறுவை சிகிச்சைக்கு பிறகு கவனிக்கும் பிரிவில் எத்தனை பேருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் கேட்டறிந்தாா்.
மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா்.
திருப்பத்தூா் அருகே வெங்களாபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம், இருப்பு குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். அங்குள்ள பொதுமக்களிடம் அரிசி,பருப்பு, சமையல் எண்ணெய், உள்ளிட்ட உணவு பொருள்கள் சரியான அளவில் வழங்கப்படுகிா என கேட்டறிந்தாா்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இ-சேவை மையம், கூட்டுறவு வங்கி ஆகியவற்றை பாா்வையிட்டு அங்கு உள்ளவா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
பின்னா், கால்நடை மருந்தகத்தில் ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் நகராட்சி அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி அனுமதி பெற்ற பிறகு தான் பதாகைகள் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
மீனாட்சி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வழங்கும் உணவின் தரத்தினை ஆய்வு செய்து மாணவிகளுக்கு மதிய உணவினை ஆட்சியா் வழங்கினாா்.
ஆய்வின்போது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ஞானமீனாட்சி, நகராட்சி ஆணையா் சாந்தி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் சிவகுமாா், அதிகாரிகள் உடனிருந்தனா்.