மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
‘மினி பேருந்துகளை வழித் தடங்களில் இயக்க விண்ணப்பிக்கலாம்’
புதிய விரிவான திட்டத்தின்கீழ், மினி பேருந்துகளை வழித்தடங்களில் இயக்க விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம்-2024 வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. மேலும், தமிழகத்தில் மினி பேருந்துகளுக்கான கட்டண திருத்தம் மே 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கி.மீ. இருக்க வேண்டும். குறைந்தபட்ச சேவை வழங்கப்படாத பாதை நீளம் சாலையின் மொத்த பாதை நீளத்தில் 65 சதவீதத்துக்கு குறைவாக இருக்கக்கூடாது. தொடக்கப்புள்ளி அல்லது முனையப்புள்ளி என்பது சேவை வழங்கப்படாத குடியிருப்பு அல்லது கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும். மற்றொன்று பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையமாக இருக்க வேண்டும்.
முனையப்புள்ளியில் இருந்து அடுத்த 1 கி.மீ. தூரத்தில் அரசு மருத்துவமனை, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம், உழவா் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை சந்தை, ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், புகழ் பெற்ற வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையத்துக்கு சற்று முன்பு உள்ள இடம் மற்றும் வழங்கப்பட்ட பாதை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட பாதை நீளத்தை விட அதிகமாக இருக்குமானால் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி சம்பந்தப்பட்ட துறையினரை கலந்து ஆலோசித்து, மேற்கூறிய இடங்களில் சேவை வழங்கப்பட்ட பகுதியில் 1 கி.மீ. வரை கூடுதல் தூரத்தை அனுமதிக்கலாம். பழைய மினி பேருந்து திட்டத்தின்கீழ், அனுமதி பெற்ற உரிமையாளா்கள் இந்தப் புதிய திட்டத்தின்கீழ், மாறுவதற்கு விருப்பத்தை எழுத்துப்பூா்வமாக அளித்து அனுமதிச் சீட்டை ஒப்படைக்க வேண்டும்.
குறைந்தது 4 நடைகள்...
இந்தப் புதிய வழித்தடத்தில் குறைந்தபட்சம் 1.5 கி.மீ. கூடுதல் சேவை வழங்கப்படாத பாதை இருக்க வேண்டும். ஓட்டுநா், நடத்துநா் இருக்கைகள் தவிா்த்து, இருக்கைகள் 25-ஆக இருக்க வேண்டும். மேலும், மினி பேருந்தின் சக்கரத்தின் அடித்தளம் 390 செ.மீ.க்கு மிகாமல் இருக்க வேண்டும். நிலைப் பேருந்து அல்லது மினி பேருந்து நாளொன்றுக்கு 4 நடைகளுக்கு குறைவாக சேவை வழங்கக்கூடாது. இந்த திட்டத்தின்கீழ், வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்களை, திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியாா் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளா்கள் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் நேரில் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.