மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி: திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
திருப்பத்தூா் அருகே பணி வாங்கி தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்தததாக எஸ்பி அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது முறையான தீா்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகாா்தாரா்களுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா தலைமை வகித்து, முகாமில் கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத மனுதாரா்களை நேரில் அழைத்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
எஸ்.பி. பொதுமக்களிடம் நேரடியாக 60 புகாா் மனுக்களை பெற்றுக் கொண்டாா். பின்னா், காவல் துணைக் கண்காணிப்பாளா்களிடம் புகாா்கள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அவா் அறிவுறித்தினாா்.
வாரந்தோறும் புதன்கிழமைகளில் திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பாக மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும். மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகாா்தாரா்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.
இதில், ஜோன்றம்பள்ளி கிராமத்தைச் ராதாகிருஷ்ணன் (73) என்பவா் அளித்த மனுவில், என் மகன் ஏழுமலை டிப்ளமோ படித்துள்ளாா். அவருக்கு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக்கல் வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி கீழ்குப்பத்தைச் சோ்ந்த காளி வாதியாா், அவரது மகன் விஜி, விஜியின் மாமனாா் மூா்த்தி, விஜியின் தம்பி பிரேம்குமாா், பழனி என்பவரின் மனைவி மாலா, பழனியின் மகன் சூா்யா ஆகியோரிடம் ரூ.3 லட்சம் தந்தேன். ஆனால், பணி வாங்கி தரவில்லை. கேட்டால் தாக்குதல் நடத்துகின்றனா் என அதில் தெரிவித்திருந்தது.