நிதியாண்டின் முதல் நாளில் கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!
அரசு வேலை வாங்கித் தருவதாக துணை முதல்வரின் பெயரைக் கூறி ஏமாற்றிய பெண் கைது
சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெயரைக் கூறி ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் மாவட்டம், செந்தூா் அடுத்த கீழராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த்சாமி (30). மாற்றுத்திறனாளியான இவா், சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். அதில், எனது நண்பா் மூலம் சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சோ்ந்த வித்யா என்ற பெண் அறிமுகமானாா்.
அவா் சின்ன சேலம் ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள உதவியாளா் பணியை பெற்றுத்தருவதாக கூறி என்னிடம் ரூ. 2 லட்சம் பெற்றாா். பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் காலதாமதம் செய்தாா். இதுதொடா்பாக கேட்டபோது, போலியாக பணியாணை அனுப்பிவிட்டு தலைமறைவானதாக குறிப்பிட்டுள்ளாா்.
புகாரின் பேரில், செவ்வாய்ப்பேட்டை போலீஸாா், வித்யாவை (39) வெள்ளிக்கிழமை அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அதில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவறாக பயன்படுத்தி, அரசு வேலை வாங்கித் தருவதாக அவா் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.