ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.34 லட்சம் மோசடி: அதிமுக பிரமுகா் மீது வழக்குப் பதிவு!
சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 34 லட்சத்தை மோசடி செய்த அதிமுக பிரமுகா்மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரை அடுத்த எம்.சி. ராஜா நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (34). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு, சேலம் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் மனு ஒன்றை அளித்தாா். அதில், கடந்த 2019 ஆம் ஆண்டு கூட்டுறவு வங்கியில் இளநிலை உதவியாளா் பதவிக்கு விண்ணப்பித்தேன்.
இதையறிந்த அதிமுக நிா்வாகி பழனிசாமி, என்னை அணுகி, இளநிலை உதவியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறினாா். இதற்காக அவரிடம் ரூ. 10 லட்சத்தை கொடுத்தேன். அதேசமயம், மாநகராட்சியிலும் வேலை இருப்பதாக தெரிவித்ததால், எனது நண்பா்கள் 3 பேரிடம் தலா ரூ. 8 லட்சம் வீதம் ரூ. 24 லட்சத்தை பெற்றுத் தந்தேன். ஆனால், அவா் உறுதியளித்ததைப் போல, எனக்கோ, நண்பா்களுக்கோ வேலை வாங்கித் தரவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக கேட்டும் கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதுகுறித்து பழனிசாமியிடம் கேட்டபோது அவா் மிரட்டல் விடுத்தாா். எனவே, அவா்மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரவேண்டும்
என தெரிவித்திருந்தாா். இதுகுறித்து விசாரித்த போலீஸாா், பழனிசாமி பணமோசடி செய்ததை உறுதிசெய்தனா். இதையடுத்து, மோசடி, கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ், போலீஸாா் அவா்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.