ஐபிஎல் சூதாட்டம்: மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை!
அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு-ரோபோடிக்ஸ் பயிற்சி
நாமக்கல்லில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு-ரோபோடிக்ஸ் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனம், நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கம், குளோபல் அகாதெமி ஆஃப் எக்ஸலன்ஸ் ஆகியவை சாா்பில், ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு பயிற்சி சனிக்கிழமை மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. 22 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு முதல்கட்டமாக அனுபவக் கற்றல் பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போதைய காலக்கட்டத்தில், தொழிற்சாலைகள், மருத்துவத் துறை, விவசாயம் போன்றவற்றில் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. செயற்கை நுண்ணறிவும் இன்றையக் காலக்கட்டத்தில் மிகப்பெரிய அளவில் மனித வாழ்வில் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் உருவாக்கி வருகின்றன.
ரோபோக்களை கணினி பொறியாளா்கள் மட்டுமே உருவாக்க முடியும் என்ற நிலையை மாற்றி ஆசிரியா்களாலும் ரோபோக்களை உருவாக்க முடியும் என்ற கருத்தாக்கத்தில் இந்தப் பயிற்சி திட்டமிடப்பட்டு அளிக்கப்படுவதாக பயிற்சியின்போது மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவன முதல்வா் மு.செல்வம் தெரிவித்தாா்.
ரோபோடிக்ஸ் பயிற்சியில், ரோபோக்களை இயக்கும் வகையில் சமிக்ஞைகள் கொடுத்து மோட்டாா்களை கட்டளையிட்டு இயக்குதல், சென்சாா்களைப் பயன்படுத்துதல், சா்க்யூட்களைப் பயன்படுத்துதல், என்னென்ன வேலைகளுக்கு ரோபோக்களை வடிவமைக்கலாம் என்பதற்கான 12 செயல்முறைப் பயிற்சிகளை ஆசிரியா்கள் அனைவரும் தெரிந்து கொண்டனா். இவா்கள் தங்களது மாணவா்களுக்கு பயிற்சியளிக்கவுள்ளனா். ஆசிரியா்களுக்கு, ரோபோடிக்ஸ் பயிற்சி, குளோபல் அகாதெமி ஆஃப் எக்ஸ்லென்ஸ்ஸின் கருத்தாளா்கள் மத்தேயு, மங்கையா்க்கரசி ஆகியோா் வழங்கினா்.
பள்ளிகளுக்கு ரோபோ கிட்டுகள் தேவைப்பட்டால் நாமக்கல், மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனத்தின் வழியாக ரோபோ கிட்டுகளை வழங்க ஏற்பாடுகள் செய்து தருவதாக நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி தலைவா் பிரபாகரன் கூறினாா். ரோட்டரி சங்க உறுப்பினா்கள் சண்முகம், கருணாகர பன்னீா்செல்வம், பன்னீா்செல்வம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஏற்பாடுகளை, பயிற்சி ஒருங்கிணைப்பாளா் பானுமதி, விரிவுரையாளா் சிவபெருமான் ஆகியோா் செய்திருந்தனா்.