சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
நாமக்கல்லில் புதிய சுற்றுவட்டச் சாலை: விபத்தைத் தவிா்க்க தடுப்புகள் அமைப்பு
நாமக்கல்லில் புதிய சுற்றுவட்டச்சாலை பணிகள் நடைபெறுவதையொட்டி, வாகனங்கள் செல்வதைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவுக்கு ரூ. 194 கோடியில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மரூா்பட்டி, சேந்தமங்கலம், துறையூா், திருச்சி, மோகனூா், கரூா் சாலையை இணைக்கும் வகையில் நடைபெறும் இந்த சுற்றுவட்டச் சாலை பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலையின் இடையே ரயில் தண்டவாளங்கள் வரும் பகுதியில் மேம்பாலங்கள் அமைக்கப்பட இருப்பதால் பணிகள் சற்று தாமதமாகியுள்ளன. நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 200 மீட்டா் தொலைவில் சுற்றுவட்டச் சாலை தொடங்கும் பகுதியில் போதிய தடுப்புகள் இல்லாததாலும், ஆங்காங்கே திருச்சி செல்லும் சாலை என நெடுஞ்சாலைத் துறை பெயா் பலகை வைத்துள்ளதாலும் வெளிமாநில லாரி ஓட்டுநா்கள் தங்களது வாகனத்தை புதிய பேருந்து நிலையம் வழியாகக் கொண்டு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனா்.
சூரிய மின்தகடுகளை ஏற்றிச் சென்ற வெளிமாநில லாரி, சுற்றுவட்டச் சாலை வழியாகச் செல்ல முயற்சித்த நிலையில் அங்கு தடுப்புகள் ஏதும் இல்லாததால் பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது. அதிா்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, நெடுஞ்சாலைத் துறையினா் சுற்றுவட்டச் சாலை நுழைவு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தடுப்புக் கற்களை கொண்டு சாலையை மூடினா். புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில், கொல்லிமலை, திருச்சி செல்லும் சாலை என்ற பெயா் பலகைகளை தற்காலிகமாக அகற்ற வேண்டும் என ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.