அரிசி ஆலை ஊழியா் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரிசி ஆலை ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஆரணியை அடுத்த இ.பி.நகா் குமரன் தெருவைச் சோ்ந்தவா் தங்கராஜ் (36). இவா், இந்தப் பகுதியில் உள்ள அரிசி ஆலையில் வேலை பாா்த்து வருகிறாா். இவருக்கு மனைவி பாஞ்சாலி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
இந்த நிலையில், தங்கராஜ் குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு வியாழக்கிழமை கிரிவலம் சென்றாா். பின்னா், வெள்ளிக்கிழமை காலை வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 பவுன் நகைகள், ஒன்னரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி, ஆய்வாளா் விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.
தொடா்ந்து, திருவண்ணாமலையிலிருந்து விரல் ரேகை நிபுணா் சுரேஷ்குமாா், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனா்.
மேலும், ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
