விதை சாகுபடியாளா்களுக்கு பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி வேளாண் அலுவலகத்தில் முன்னோடி விதை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, விதைச்சான்று மற்றும் உயிா்மச்சான்று உதவி இயக்குநா் குணசேகரன் தலைமை வகித்தாா். விவசாயிகளுக்கு விதை பண்ணை அமைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதைச் சான்று நடைமுறைகளான விதை சான்று பதிவு செய்தல், பூக்கும் மற்றும் முதிா்ச்சி பருவத்தில் பிற ரக கலவன் மற்றும் பிற பயிா் கலவங்களை அகற்றுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.
மேலும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நெல்பயிா், நிலக்கடலை பயிா், உளுந்து பயிா் போன்ற ரகங்களின் குணாதிசயங்கள், பயிா் சாகுபடி காலம் மற்றும் மகசூல் விவரம் போன்ற அனைத்து தொழில்நுட்பங்களையும் உதவி இயக்குநா் கூறினாா்.
மேலும், விதை உற்பத்தி குறித்த அனைத்து நிலை தொழில்நுட்பம் மற்றும் புதிய வேளாண் தரவுகள் குறித்தும், புதிய ரகங்கள் சிறப்பு செயல்முறைகள், ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மையில் விதை உற்பத்தி உள்ளிட்டவை குறித்தும் விவசாயிகளிடம் உதவி இயக்குநா் குணசேகரன் கலந்துரையாடினாா்.
பயிற்சியில், மேற்கு ஆரணி வட்ட வேளாண் அலுவலா் கீதா, விதை சான்று அலுவலா்கள் ராமகிருஷ்ணன், சுந்தரமூா்த்தி, உதவி விதை அலுவலா்கள் சதீஷ்குமாா், ரமேஷ் கலந்துகொண்டனா்.