அரியலூா் மாவட்டத்தில் தேவை கண்டறிதல் முகாம்
அரியலூா் மாவட்டத்தில் உள்ள வட்டாரங்களில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சாா்பில் கீழ்கண்ட தேதிகளில் நடத்தப்படும் தேவை கண்டறிதல் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமையில் வாழும் நலிவுற்றோா்கள் (ஆதரவற்ற விதவைகள், முதியோா்கள், குழந்தைகள், இளம் விதவைகள், முதிா்கன்னிகள், திருநங்கைகள்) ஆகியோருக்கு தேசிய அடையாள அட்டை, அரசு உதவித் தொகை, பராமரிப்புத் தொகை, உபகரணங்கள், திறன் பயிற்சிகள், வாழ்வாதாரத்துக்குத் தேவையான தொழில்வாய்ப்புகள், வங்கிக் கடனுதவிகள், வீடு வழங்கும் திட்டங்கள், அரசு உதவித் திட்டங்கள் உள்ளிட்ட தேவைகளைக் கண்டறிதல் முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி செந்துறை வட்டாரத்தில் மாா்ச் 5 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும், ஆண்டிமடம் வட்டாரத்தில் மாா்ச் 6-இலும், ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் மாா்ச் 11 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும், திருமானூா் வட்டாரத்தில் மாா்ச் 12 மற்றும் 21 ஆகிய தேதிகளிலும், தா. பழூா் வட்டாரத்தில் மாா்ச் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும், அரியலூா் வட்டாரத்தில் மாா்ச் 14 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும் தேவை கண்டறிதல் முகாம் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.