அரியலூா் மாவட்டத்தில் மாா்ச் 8-இல் பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்
அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த கரைவெட்டி பறவைகள் சரணாலயம், வெங்கனூா், இலந்தைகூடம் உள்ளிட்ட 10 இடங்களில் மாா்ச் 8-இல் பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்படும் என்று மாவட்ட வன அலுவலா் இளங்கோவன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: தமிழகத்தின் சரணாலயங்களில் ஒன்றான அரியலூா் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு சைபீரியா, திபெத், மங்கோலியா மற்றும் வட இந்தியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரிதலை வாத்து, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், கூழைக்கடா, நாரைகள், கொக்குகள், நீா் காகங்கள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் வலசை வந்து தங்கி குஞ்சு பொறித்து திரும்பச் செல்வது வழக்கம்.
2024-ஆம் ஆண்டு ராம்சாா் தளமாக இந்தப் பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டது. இங்கு தமிழக வனத்துறை சாா்பில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மாா்ச் 8, 9 ஆகிய தேதிகளில் ஈர நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியும், மா்ா்ச் 15,16 தரைவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியும் நடைபெறுகிறது.
பறவையியல் வல்லுநா்களான பேராசிரியா்கள் சிவசுப்பிரமணியன், ஜெரோமியா, நேசராஜன், ஜெயகுமாா் ஆகியோரின் வழிநடத்துதலின்படி அரியலூா் அரசு கலைக் கல்லூரி , திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி மாணவா்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுகின்றனா் எனத் தெரிவித்துள்ளாா்.