அரூரில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: அரசு பள்ளிகள், மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு
அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட சிறப்பு முகாமில் அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவனையில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு மேற்கொண்டாா்.
அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி, பறையப்பட்டி புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு, காலை உணவுகளின் சுவை, தரம் குறித்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை, ஆசிரியா்களின் வருகை, கல்வித்தரம் குறித்து ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா்.
இதையடுத்து அரூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், புற நோயாளிகள், கா்ப்பிணிகள் சிகிச்சை பிரிவுகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, அரூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, 13 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
இந்த முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியா் கேத்ரின் சரண்யா, அரூா் வருவாய் கோட்டாட்சியா் சின்னுசாமி, வட்டாட்சியா் பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.