பட்டாசுக் கிடங்கு விபத்தில் உயிரிழந்த தொழிலாளா் குடும்பத்தினருக்கு திருமாவளவன் ஆறுதல்
பட்டாசுக் கிடங்கு வெடி விபத்தில் உயிரிழந்த பெண் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் புதன்கிழமை ஆறுதல் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா்-வெதரம்பட்டி சாலையில், தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கிடங்கில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் பூமிசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி திருமலா் (38), கம்பைநல்லூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த மேகநாதன் மனைவி செண்பகம் (35), தியாகு மனைவி திருமஞ்சு (33) ஆகிய மூவரும் உயிரிழந்தனா்.
தீ விபத்தில் உயிரிழந்த பெண் தொழிலாளா்கள் மூவரின் குடும்பத்தினரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். அப்போது, தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள், வேலைவாய்ப்புகள் குறித்து அவா் கேட்டறிந்தாா். தொடா்ந்து, உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 ஆயிரம் நிதியை அவா் வழங்கினாா்.
தருமபுரி மாவட்டம், டி.அம்மாப்பேட்டை மற்றும் நீப்பத்துறை கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் வேடப்பன், விஜயராகவன், இளம்பரிதி, ஆதிகேசவன், கிரி, முனிவேல், ஆகாஷ், பிரகாஷ் ராஜ் ஆகிய 8 பேரும் 2023-இல், ஒசூா் அருகே நடந்த பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தனா். இவா்கள் குடும்பத்தினரையும் .திருமாவளவன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். அவா்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 ஆயிரம் நிதியையும் அவா் வழங்கினாா்.