செய்திகள் :

அறியாத வயதில் தோன்றிய அன்பு திருமணத்தில் முடிந்த கதை! - ஜில்லுன்னு ஒரு கிராமத்து காதல் #ஆஹாகல்யாணம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

நாங்க 80s கிட்ஸ் ah.? 90s கிட்ஸ் ah.?, எப்பவும் ஒரு குழப்பம் இருக்கும். எதுக்கு குழம்பிக்கிட்டு, 80s ல  பிறந்து 90s ல வளர்ந்த கிட்ஸ் நாங்க.. நாங்க நா.? யாரு அந்த நாங்க..? நானும் அவளும் தான்.. 

அவ இல்லாம எப்படிங்க இந்த கட்டுரையை எழுத முடியும்.. 

நான் திருவண்ணாமலை பக்கத்தில் ஒரு கிராமம், அவள் செங்கல்பட்டு பக்கத்தில் ஒரு கிராமம். அவள் எனது அத்தை மகள். தகவல் பரிமாற்றத்திற்கு கடிதம், தந்தி அல்லது நேரில் சென்று வரும் நிலை மட்டுமே இருந்த காலம் அது.

வருடத்திற்கு ஒரு முறை பள்ளி விடுமுறைக்கு ஊருக்கு வருவாள், அல்லது நான் அவள் ஊருக்கு செல்வேன். அந்த விடுமுறை நாட்களுக்கும் அவளின் வருகைக்கும் வருடம் முழுவதும் காத்திருப்பேன். ஊர் முழுவதும் சொந்தங்கள் தான். அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா பிள்ளைகள் என எங்கள் வயது ஒத்த பிள்ளைகள் மட்டும் 10 க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

விடுமுறை நாட்கள் முழுவதும் வெயிலோடு விளையாடி, இரவெல்லாம் கதை பேசி கழியும். கிணற்றில் குளியல், பல்லாங்குழி, பம்பரம், கில்லி, கோலி, கண்ணாமூச்சி, என விளையாட்டிற்கு பஞ்சமே இல்லை. பசி எடுத்தால், பனைமரம், மாமரம், கொடுக்காப்புளி மரம் என அனைத்து மரங்களிலும் எங்களை காணலாம். பகலெல்லாம் வானளந்து, இரவில் கூடடையும் பறவைகள் போல் அந்த வாழ்க்கை. 

அப்படியே பள்ளிப்பருவம் மகிழ்ச்சியாகப்போக, என் மனதில் இருக்கும் பிரியத்தை அவளிடம் கூற பல சந்தர்ப்பங்களில் முயற்சித்து தோல்வியடைந்துள்ளேன். அந்த தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும், அனைத்தும் ஒரு புள்ளியில் முடியும். அது தான் அச்சம். ஆம், அச்சம் தான். என் விருப்பத்தைக்கூறி அவள் நிராகரித்தால் என்ன ஆகும், அவள் வீட்டில் கூறிவிட்டால் என்ன ஆகும், ஒரு வேலை அவள் சம்மதித்து, பிறகு வீட்டிற்கு தெரிந்தால் என்ன ஆகும், என பல்வேறு குழப்பங்களும் பயமும் கலந்து தோன்றும். 

2002 ஆம் வருடம், அவளும் நானும் தனியே சைக்கிள் பயணம் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. 5 கிலோமீட்டர் பயணம் அது. எங்கள் வாழ்கை பயணத்தை மாற்றபோகும் பயணம் அது என்பது எங்கள் இருவருக்குமே தெரியாது. நான் மிதிவண்டியை மிதிக்க அவள் பின்னால் அமர மெல்ல துவங்கியது அந்த பயணம்.

எப்பொழுதும் கலகலவென்று பேசி விளையாடிய நாங்கள், தனிமையில் முதல் முறை இருந்ததாலோ என்னவோ, அமைதி மட்டுமே நிலவியது. மௌனத்தை அவளே கலைத்தாள்..

என்ன அமைதியா வர..? என்றாள் அவள்.

ஒன்னும் இல்ல சும்மா தான், என்ன பேசுறது னு தெரியல.. என்றேன் நான்,

உனக்கா பேச தெரியாது, வாய தொறந்தா மூடவே மாட்ட, எல்லோருடனும் சேர்ந்து அப்படி கிண்டல் அடிப்ப, இப்போ என்ன.. என்றாள் அவள்,

அதான் எனக்கும் தெரியல, இப்போ பேச்சே வரல.. என்றேன்,

ஏன்.. என் கூட வரது புடிக்கலயா..? என்றாள்,

இல்ல, இல்ல.. அப்படி லாம் இல்ல, இப்படி ஒரு நாளுக்கு தான்ன்ன்ன்... என இழுத்தேன்..

என்ன சொல்லு..

ஒன்னும் இல்ல விடு.. 

ஒன்னும் இல்லையா.. சரி சரி.. என ஏதோ புரிந்தது போல் சிரித்தாள்..

சரி.. போன லீவுக்கு ஊருக்கு வந்த அப்போ, நீச்சல் தெரியாம கிணத்துல பைப்ப புடிச்சு தொங்கிகிட்டு இருந்தியே, இன்னும் அப்படி தான் தொங்கிகிட்டு இருக்கியா.. என கேட்டு சிரித்தாள்..

ஓய்ய்.. என்ன கிண்டல் பண்றியா.. இப்போ வந்து பாரு, நான் கிணத்துல டைவ் லாம் அடிக்க கத்துக்கிட்டேன் தெரியுமா.. என்றேன் நான்,

பாக்கலாம், பாக்கலாம் என கூறி மீண்டும் நகைத்தாள்,

இப்படியே பேசிக்கொண்டே பயணித்ததில், நான் இறங்க வேண்டிய இடம் வந்ததை கூட கவனிக்கவில்லை. அரை மணி நேர பயணம், அரை நொடியென கழிந்தது போல் இருந்தது.

சரி பஸ் ஸ்டாப் வந்துடுச்சு நிறுத்து.. என்றாள்,

அதுக்குள்ள வந்துடுச்சா என நான் கேட்ட தோரணையில் ஒரு வருத்தம் இருந்தது,

ஆமா வந்துடுச்சு, விட்டா ஊருக்கே கூட்டிட்டு போய்டுவா போலயே.. என்றாள், சிரித்துக்கொண்டே,

ஏன் கூட்டிட்டு போனா வர மாட்டியா.. என்றேன், முகத்தை சற்று பாவமாய் வைத்துக்கொண்டு,

ஆமா இவரு சொன்னா அப்படியே கூட வந்துடுவாங்க, ஆள பாரு.. என கிண்டல் தோணியில் பதில் வந்தது,

நெசமாதான் கேட்குறேன், என் கூட வீட்டுக்கு வருவியா.? என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு.. என சட்டென கேட்டு விட்டு, பதட்டத்தில் கை கால்கள் நடுங்க தொடங்கியதை நன்கு உணர்ந்தேன்.

லூசு, பஸ் வந்துடுச்சு பாரு, பாத்து பத்தரமா வீட்டுக்கு போ, அப்புறம் வந்து என்ன கூட்டிட்டு போவ.. என கூறி மிதிவண்டியை உருட்டிய படி, பின்னால் திரும்பி, பேருந்தில் இருந்த என்னை பார்த்தபடியே நடந்தாள்.

அவளின் பதிலை நான் எப்படி புரிந்துகொள்வதென்று தெரியாமலே வீடு போய் சேர்ந்தேன். 

பிறகு, ஆர்வம் தாங்காமல் கடிதம் எழுதி, அதற்கு அவள் பதில் கடிதம் எழுதி, அதை போஸ்ட்மேன் என் அப்பாவிடம் கொடுத்து, கலவரம் ஆனது மற்றொரு பெரிய கதை. 

போஸ்ட்மேனை தனியே கவனித்து, மீண்டும் கடிதங்கள் எழுதியது, வாழ்த்து அட்டைகள் அனுப்புவது, விடுமுறை நாட்களில் அவளின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பது, தனிமையில் சந்திப்பது, அவளின் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் நின்று பார்ப்பது என, நாட்கள் வேகமாக நகர்ந்தன. 

கல்லூரி படிப்பிற்கு சென்னை வந்து சேர்ந்தேன். சித்தப்பா வீட்டில் தங்கி கல்லூரி சென்றேன். ஒரு வருடம் கழித்து அவளும் அவள் ஊருக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் சேர்ந்தாள். அவளுக்கு படிப்பென்றால் பாகற்காய் போல தான், என் தந்தை தான் அவளை வற்புறுத்தி சேர சொன்னார். 

அதுவரை, அஞ்சல் அட்டையில் மட்டுமே பேசிய நாங்கள், சித்தப்பாவின் வீட்டில் இருந்த டெலிபோன் மற்றும் அவளின் கல்லூரி வாசலில் இருந்த டெலிபோன் பூத் மூலம், தொலைபேசியில் பேசத்தொடங்கினோம். காலை 8.30 மணிக்கு வரும் அவளின் அழைப்பிற்காக, 8 மணிக்கே டெலிபோன் பக்கத்தில் அமர்ந்துகொண்டு யாரும் பயன்படுத்தாமல் பார்த்துக்கொண்ட அந்த நாட்களை நினைத்தால், இன்றும் சிரிப்பு வரும். 

வீட்டில் உள்ள அனைவருக்கும் எங்கள் கதை தெரியும், ஆனால் யாரும் அதை வெளியே காட்டிக் கொண்டதில்லை, வெளிப்படையாக ஆதரித்ததும் இல்லை. அதே சமயத்தில், எங்களை கண்காணிக்கவும் தவறியதில்லை. 

எங்கள் காதலுடன் சேர்ந்து நாங்களும் வளர்ந்தோம். கல்லூரி முடித்து ஒரு தனியார் IT நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வீட்டில் அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி. எங்கள் குடும்பத்தில் நான் முதல் பட்டதாரி, நான் முதல் நாள் வேளைக்கு சென்ற அன்று உறவினர்கள் அனைவரும் வந்து வாழ்த்தி வழியனுப்பினர். அவளும் வந்திருந்தாள், அவள் அன்று கொடுத்த 10 ரூபாய் இன்னும் என்னுடைய பணப்பையில் பத்திரமாக உள்ளது. 

வேலைக்கு சேர்ந்ததும், எனக்கென ஒரு கைபேசியும் கிடைத்தது. தொலைபேசியில் இருந்து, கைபேசிக்கு மாறியது எங்கள் உரையாடல்கள். அப்படியே 1 வருடம் கழிந்தது, அவளும் கல்லுரி படிப்பை முடித்தாள்.  

கல்லூரி படிப்பை முடித்ததை கொண்டாடுவதா, இனிமேல் டெலிபோன் பூத் மூலம் பேச முடியாதே, மீண்டும் எப்பொழுது பேச வாய்ப்பு கிடைக்கும் எனும் குழப்பத்திலேயே முடிந்தது கல்லூரியின் கடைசி நாள். 

அவள் எப்பொழுதாவது பக்கத்தில் இருக்கும் நகரத்திற்கு செல்லும்பொழுது பேசுவது, யாரேனும் கைபேசியுடன் ஊருக்கு சென்றால் பேசுவது என, நாங்கள் பேசிக்கொள்ளும் நாட்கள் மிகவும் குறைவு. அப்படியே 6 மாதங்கள் ஓடின. 

இதற்கிடையில் என் தாத்தாவின் உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தினால், என்னுடைய திருமண பேச்சு தொடங்கியது. அதுவரை அனைத்தும் சரியாக சென்றுகொண்டிருந்த நிலையில், திருமணம் என்ற முடிவிற்கு வந்ததும், சிக்கல்கள் ஒவ்வொன்றாக ஆரம்பித்தன. அம்மாவின் விருப்பம், அப்பாவின் விருப்பம், குடும்ப சூழ்நிலைகள், சண்டைகள் என அனைத்தும் சேர்ந்து ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவியது. ஒவ்வொரு நாளும், ஒவொரு செய்தி வரும். இன்று என்ன பிரச்னையுடன் செய்தி வரும் என யோசித்து யோசித்து நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் அலுவலகம் முடித்து வீட்டிற்க்கு வந்த பொழுது சித்தப்பாக்கள் மூவரும் வீட்டில் இல்லை. 

எங்கே என சித்தியிடம் கேட்க, அப்பா கிட்ட இருந்து போன் வந்தது, அதனால எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்க.. என்றார். அனால் என்ன காரணம் என சித்திக்கு தெரியவில்லை. 

தாத்தாவிற்கு உடல்நிலை மோசமாகிவிட்டதா.? இல்லை, வீட்டில் வேறு ஏதேனும் பிரச்சனையா.? என குழப்பத்தில் இருந்தேன். அப்பொழுது தான் என் கைபேசிக்கு அந்த அழைப்பு வந்தது. அழைப்பு சித்தப்பாவிடம் இருந்து..

சற்று பத்துடனேயே அந்த அழைப்பை எடுத்தேன். 

தம்பி எங்க இருக்க, வீட்டுக்கு வந்துட்டியா.?.. என்றார் சித்தப்பா,

வீட்டுக்கு வந்துட்டேன், கொஞ்ச நேரம் ஆச்சு. என்ன திடீர் னு ஊருக்கு.. என்றேன்,

எல்லாம் நல்ல விஷயம் தான்டா தம்பி, உனக்கு கல்யாணம் பண்ணலாம் னு முடிவு பண்ணி இருக்கோம், அடுத்த மாசம் நிச்சயதார்த்தம், அதுக்கு அடுத்த மாசம் கல்யாணம். இப்போ தான் கல்யாண மண்டபத்துக்கு அட்வான்ஸ் குடுத்துட்டு வெளிய வந்தோம். என்ன சந்தோஷமா.. என நீளமாக பேசிமுடித்தார் சித்தப்பா,

சித்தப்பா.. என்ன சொல்றீங்க.. என சற்று குழப்பத்துடன் கேட்டேன்,

கவலைப்படாதடா, தேவி (அது தான் என்னவளின் பெயர்) கூட தான் கல்யாணம். எல்லாரும் கலந்து பேசி தான் முடிவு பன்னோம். அதுக்கு தான் ஊருக்கு வந்தோம். மத்தது எல்லாம், வீட்டுக்கு வந்து சொல்றேன்.. எனக்  கூறி அழைப்பைத் துண்டித்தார் சித்தப்பா.. 

செய்தியை கேட்டு நான் உறைந்துவிட்டேன். சற்று நேரம் மாடிப்  படிக்கட்டில் அப்படியே அமர்ந்து சாய்ந்து கொண்டேன். இயல்பு நிலைக்கு வந்ததும், மனம் முழுவதும் சந்தோஷம் பரவியது, மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன், அந்தக் கூத்தாடினேன். இந்தச் செய்தியை என்னவளிடம் நான் முதலில் கூறவேண்டுமென்று முடிவுசெய்தேன். வண்டியை கிளப்பினால், ஒன்றரை மணி நேரத்தில் அவள் வீட்டைச் சென்றடையலாம். ஆனால், அதைச் செய்ய தைரியம் வரவில்லை. 

எனவே, அவள் ஊருக்கு பக்கத்தில் உள்ள அஞ்சலகத்திற்கு தொலைபேசியில் அழைத்தேன். அந்த போஸ்ட்மேன் நன்கு பழகியவர் தான். அவரிடம் உதவியை நாடினேன். அவரும் உதவ சம்மதித்து, என்னவளை அழைத்து வந்தார். அந்த மகிழ்ச்சியை, அவளிடம் பகிர்ந்துகொண்ட அந்த தருணம், பேரானந்தத்திற்கும் மேல் ஒன்று உண்டென்றால், அதனுடன் ஒப்பிடலாம். இருவருக்கும் மகிழ்ச்சியில் வார்த்தை எழவில்லை, கண்கள் குளமாகின, இதயத்துடிப்பு எத்தனைமடங்கு உயர்ந்தது என வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அந்தத் தருணத்தை இப்பொழுது நினைத்தாலும் கண்கள் கலங்கும்.

திருமணம் நிச்சயமான பொழுது எனக்கு வயது 21. காதலித்த பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆனதை நினைத்து நினைத்து ஆனந்தம் கொண்ட அதே தருணத்தில், இவ்வளவு சிறிய வயதில் திருமணம் நிச்சயமானதை நினைத்து வாழ்க்கையின் மீது பொறுப்பு கலந்த ஒரு பயம் மெல்லத் தோன்றத்தான் செய்தது.

ஆனால், அந்த பயம் தேவையில்லாதது என போகப் போக அவளும் அவளுடனான வாழ்க்கையும் உணர்த்தியது. சுகம், சோகம், மகிழ்ச்சி, துக்கம், பண நெருக்கடி என அனைத்து தருணத்திலும் அவள் எனக்குப் பக்கபலமாக இருந்தாள். நான் துவண்டுபோன சமயங்களில், அவளின் துணை என்னை மீண்டு எழவைத்தது. இவ்வாறு என் வாழ்க்கையின் அனைத்துப் பக்கங்களிலும் அவளின் பங்கு இருந்தது. அவள் இல்லாமல் என் பக்கங்களை ஒருபொழுதும் எழுதமுடியாது.

அந்த நெருக்கம் தான் எங்கள் பயணத்தில் மேலும் மேலும் இன்பம் சேர்கின்றது. இன்றும் அதே தீராக்காதலுடன் 17 வருடம் முடிந்து 18ஆம் ஆண்டை நோக்கி எங்கள் காதல் பயணம் தொடர்கிறது.

ஒரு சிறு கவிதை:

“காதல்னா என்னனு தெரியாத வயசுல காதலிச்சோம்..

கல்யாணம்னா என்னனு தெரியாத வயசுல கல்யாணமும் பண்ணிகிட்டோம்...

நண்பர்கள் எல்லாம் குழந்தை திருமணம்னு சொன்னாங்க..

ஆமா.. குழந்தைங்க மாதிரி தான் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சண்ட போட்டு,

அப்பா அம்மா கிட்ட புகார் குடுத்துக்கிட்டோம்...

அப்படி சின்ன சின்ன சண்டை நிரய போட்டதாலோ என்னவோ,

எந்த ஒரு சண்டையும் நம்மள பெருசா பாதிச்சசது இல்ல..

வருஷம் 18 ஆச்சு..

குழந்தைங்க 2 ஆச்சு..

நாம் புரிதலும் அதிகம் ஆச்சு..

இன்னும் நிறய சொல்லணும்.. ஆனா எழுத முடியல.. 

அதனால சுருக்கமா ஒரே வரி ல சொல்றேன்..

என் வாழ்க்கைல நான் பண்ண உருப்படியான வேல உன்ன காதலிச்சு கல்யாணம் பண்ணது தான்..”


மீண்டும் இந்த அழகிய தருணங்களை மீட்டெடுத்து, வெளிக்கொணர வைத்த விகடனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். 


என்றும் பிரிமுடன்,

விகடனின் வாசகன்,

கிருபாகரன் குமார்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்களுக்கு போர் அடிக்கவில்லையா? - கார் பந்தையத்தில் அஜித் எங்களிடம் கேட்ட கேள்வி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

உங்க உடம்பில் உண்மையில் உங்க சாதி ரத்தம் மட்டும்தான் ஓடுதா? - பெற்றோரிடம் ஒரு கேள்வி |#ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சாவின் நிழல்! - திரில் சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மச்சானிடம் வாங்கிய அடியின் வலியோடு இனிதே நடந்த “நிக்காஹ் முபாரக்” | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க