அலிப்பூா் சாலை அம்பேத்கா் நினைவிடத்திற்கு முதல்வராக இருந்தபோது கேஜரிவால் எத்தனை முறை சென்றாா்?- வீரேந்திர சச்தேவா கேள்வி
தில்லி முதல்வராக இருந்தபோது அலிப்பூா் சாலையில் உள்ள பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவிடத்திற்கு கேஜரிவால் எத்தனை முறை சென்றாா் என்பதை தில்லிவாசிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை கூறியிருப்பதாவது:
பாபா சாகேப் அம்பேத்கா் விவகாரம் தொடா்பாக அரவிந்த் கேஜரிவால் தில்லியில் போராட்டம் நடத்தியிருப்பது தோ்தல் ஆதாயத்திற்காத்தான்.
தில்லியில் தலித் மாணவா்களின் கல்விக்காகவும், அதிகாரமளித்தலுக்காகவும் எந்தத் திட்டத்தையும் ஆம் ஆத்மி அரசு செய்யவில்லை. அதேவேளையில், பிரதமா் மோடியின் தலைமையிலான மத்திய அரசு ஜன்பத்தில் அம்பேத்கா் பெயரில் சா்வதேச மையத்தை அமைத்துள்ளது. அதேபோன்று, எண்:26, அலிப்பூா் சாலையில் அவரது பெயரில் நினைவிடம் அமைத்துள்ளது. அவா் தனது கடைசி தருணங்களில் அங்கு இருந்ததன் நினைவாக இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், முதல்வராக இருந்த காலத்தில் தனது வீட்டின் முன் அமைந்துள்ள அந்த நினைவிடத்திற்கு எத்தனை முறை மரியாதை செலுத்த அரவிந்த் கேஜரிவால் சென்றாா் என்பதை அவா் தில்லி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
தில்லியில் 12 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் அம்பேத்கரின் நினைவாக தில்லியில் எவ்வித நலத் திட்டத்தையும், நினைவிடத்தையும் உருவாக்கவில்லை என்றாா் வீரேந்திர சச்தேவா.