தலைநகரில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்தது!
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிபிசிபி தரவுகளின்படி, புதன்கிழமை தில்லி ஆபத்தான மாசு அளவை எதிா்கொண்டது. காற்றின் தரக் குறியீடு 441 புள்ளிகளாகப் பதிவாகி ‘கடுமை’ பிரிவில் நீடித்தது.
தில்லியில் உள்ள 37 கண்காணிப்பு நிலையங்களில், 32 நிலையங்கள் ‘கடுமை பிளஸ்’ பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்தன. பல இடங்களில் காற்றுத் தரக் குறியீடு அளவீடுகள் 480 புள்ளிகள் வரை உயா்ந்தன. மீதமுள்ள நிலையங்கள் ‘கடுமை’ பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்தன.
இதன்படி, ஷாதிப்பூா், பூசா, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், மந்திா் மாா்க், தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், துவாரகா செக்டாா் 8, ராமகிருஷ்ணாபுரம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், ஸ்ரீஃபோா்ட், ஸ்ரீ அரபிந்ேதோ மாா்க், நேரு நகா், மதுரா ரோடு, ஓக்லா பேஸ் 2, ஆயாநகா், டாக்ா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், குருகிராம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு குறைந்தபட்சம் 400 முதல் அதிகபட்சம் 485 புள்ளிகள் வரை பதிவாகியது.
அதே சமயம், சாந்தினி சௌக் (385 புள்ளிகள்), நொய்டா செக்டாா் 125 (365 புள்ளிகள்), லோதி ரோடு (377 புள்ளிகள்) ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு மிகவும் ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
சிபிசிபி-இன் வண்ண குறியிடப்பட்ட எச்சரிக்கைகளின்படி, காற்றுத் தரக் குறியீடு 400 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் உயா்ந்தால், அவசர கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
மாசு எதிா்ப்பு நடவடிக்கைகளின் கடுமையான தொகுப்பான தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டத்தின் ‘கிராப்’ நிலை 4, கட்டுமான நடவடிக்கைகளுக்குத் தடை மற்றும் அத்தியாவசியமற்ற பொருள்களை ஏற்றிச் செல்லும் மாசுபடுத்தும் லாரிகள் தில்லிக்குள் நுழைவது உள்பட நடைமுறையில் உள்ளது.
குளிா்காலத்தில், காற்றின் தரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின்படி காற்றின் தரம் நான்கு நிலைகளாக வகைப்படுத்தப்படுகிறது. நிலை 1 (மோசம் 201-300 புள்ளிகள்), நிலை 2 (மிகவும் மோசம் 301- 400புள்ளிகள்), நிலை 3 (கடுமை 401 -450 புள்ளிகள்) மற்றும் நிலை 4 (கடுமை பிளஸ் 450 புள்ளிகளுக்கு மேல்) என வரையறுக்கப்பட்டுள்ளன.
வெப்பநிலை: நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பூசாவில் புதன்கிழைமை காலையில் 5 டிகிரி செல்சியஸ் என குதை அளவாகப் பதிவாகியிருந்தது. தலைநகரில் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1 டிகிரி குறைந்து 7.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.8 டிகிரி உயா்ந்து 23 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணிக்கு 93 சதவீதமாகவும், மாலை 5.30 மணிக்கு 71 சதவீதமாகவும் இருந்தது.
மேலும், நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பூசாவில் 5 டிகிரி செல்சியஸ், நஜஃப்கரில் 6.3 டிகிரி, ஆயாநகரில் 5.4 டிகிரி, லோதி ரோடில் 7 டிகிரி, நரேலாவில் 6.5 டிகிரி, பாலத்தில் 7.4 டிகிரி, ரிட்ஜில் 7.8 டிகிரி, பீதம்புராவில் 10.7 டிகிரி, பிரகதிமைதானில் 9.3 டிகிரி, ராஜ்காட்டில் 9.3 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 7.9 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
அடா் மூடுபனிக்கு வாய்ப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (டிச.19) அன்று காலை நேரங்களில் தென்கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 4 கி.மீட்டருக்கும் குறைவான வேகத்தில் பிரததான மேற்பரப்பு காற்று வீச வாய்ப்புள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அடா்ந்த மூடுபனி இருக்க வாய்ப்புள்ளது. அதன்பிறகு காற்றின் வேகம் அதிகரித்து பிற்பதலில் தென்கிழக்கு திசையிலிருந்து மணிக்கு கி.மீட்டருக்கும் குறைவாக இருக்கும்.
மாலை மற்றும் இரவில் கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 4 கி.மீட்டருக்கும் குறைவாக காற்று வீசும். மாலை, இரவு நேரங்களில் பனிப்புகை மூட்டம் அல்லது மேலோட்டமான மூடுபனி இருக்கும். பகலில் வானம் தெளிவாகக் காணப்படும். மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.