தில்லியில் உதான் பவன் அலுவலக வளாகத்தில் தீ விபத்து
தெற்கு தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள உதான் பவன் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்தச் சம்பவத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவா்கள் மேலும் தெரிவித்தனா்.
உதான் பவன் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் பல அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இரண்டாவது அடித்தளத்தின் பேட்டரி அறையில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்து குறித்து மதியம் 12.54 மணிக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, உடனடியாக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்புப் படை வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை கட்டுக்குகள் கொண்டு வந்தனா் என்று தீயணைப்பு சேவைத் துறைத் தலைவா் அதுல் காா்க் தெரிவித்தாா்.
தீ விபத்தைத் தொடா்ந்து, ஒரு போலீஸ் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், விசாரணை நடந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.