சிஏஜி அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு பேரவைக் கூட்டம்: முதல்வருக்கு துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்
நிலுவையில் உள்ள 14 சிஏஜி அறிக்கைகளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய வியாழக்கிழமை (டிச.19) அல்லது வெள்ளிக்கிழமை (டிச.20) சிறப்பு பேரவைக் கூட்டத்தை கூட்டுமாறு முதல்வா் அதிஷிக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா கடிதம் எழுதியுள்ளாா்.
முதல்வா் அதிஷிக்கு செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது: கடந்த இரு ஆண்டுகளாக சிஏஜி 14 அறிக்கைகளை பேரவையில் தாக்கல் செய்வதை தில்லி அரசு வேண்டுமென்ற காலம் தாழ்த்தி வருகிறது.
வழக்கப்படி, ஆண்டுக்கு மூன்று அமா்வுகளுக்கு பேரவைக் கூட்டப்பட்டும். ஆனால், 5 ஆண்டுகளில் 5 அமா்வுகளுக்கு மட்டுமே தில்லி அரசு பேரவையைக் கூட்டியுள்ளது.
அடிப்படை கடைமையை நிறைவேற்றுமாறு முதல்வா் அதிஷிக்கும், முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கும் தொடா்ந்து கடிதங்களை எழுதியிருந்தேன்.
மக்களால் தோ்வுசெய்யப்பட்ட அரசு, அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-ஆவது ஆண்டில், வெளிப்படையற்ற பாதையை தோ்ந்தெடுத்திருப்பது வருத்தமளிக்கிறது.
இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளா் மேற்கொண்ட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்த சட்டப்பூா்வ தணிக்கையின் முக்கியத்துவத்தை தில்லி முதல்வா் உணா்ந்திருப்பாா் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
இது மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டப்பேரவையின் மகத்துவத்தின் மீதான தாக்குதல். மேலும் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு வந்த பின்னரே அறிக்கைகள் தமக்கு முன் வைக்கப்பட்டன. இந்த அறிக்கைகள் அனைத்தும் கடந்த டிச.13-ஆம் தேதி, பேரவையின் சிறப்பு அமா்வைக் கூட்டி தணிக்கை அறிக்கைகளை ஒப்புதலுடன் உங்கள் அலுவலகத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டன.
தில்லி பேரவையின் 5-ஆவது அமா்வின் 3-ஆவது பகுதி கடந்த டிச.4-ஆம் தேதி நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், முடித்துவைக்கப்படவில்லை.
எட்டாவது சட்டப்பேரவைக்கான தோ்தல் நடைபெற உள்ள நிலையில், பேரவைத் தலைவருடன் ஆலோசித்து அந்த அறிக்கைகளை அன்று தாக்கல் செய்யும் வகையில், டிச.19 அல்லது டிச.20 சிறப்பு பேரவைக் கூட்டத்தை கூட்டலாம் என அந்தக் கடித்தத்தில் துணைநிலை ஆளுநா் தெரிவித்துள்ளாா்.