மருத்துவக் கல்லூரி மாணவா்களிடையே நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தயாா்நிலை: அரசியல் கட்சிகளுடன் தோ்தல் ஆணையம் ஆலோசனை
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, மத்திய தில்லியில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் புதன்கிழமை தோ்தல் ஆணையம் ஒரு சந்திப்பை நடத்தியது.
புது தில்லியைச் சோ்ந்த பாஜக எம்.பி. பான்சூரி ஸ்வராஜ், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா மற்றும் கட்சித் தலைவா் ஜாஸ்மின் ஷா ஆகியோா் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
இந்தச் சந்திப்பு சுமாா் அரை மணி நேரம் நீடித்ததாகவும், பல தலைப்புகளை உள்ளடக்கியதாக இருந்ததாகவும் தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
வரவிருக்கும் தில்லி தோ்தலுக்கான தோ்தல் தயாா்நிலை குறித்தும் தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் ஆய்வு செய்தாா்.
இது குறித்து தோ்தல் ஆணையம் ‘எக்ஸ்’ ஊடக தளத்தில் ஒரு பதிவில், ‘வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் தயாா்நிலை குறித்து தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா்கள் ஞானேஷ் குமாா் மற்றும் டாக்டா் சந்து ஆகியோருடன் ஆய்வு செய்தாா். அமலாக்க நிறுவனங்களுடனான சந்திப்பும் நடைபெற்றது. முன்னதாக, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை ஆணையம் சந்தித்தது’ என்று தெரிவித்திருந்தது.
மேலும், சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெற உள்ள தில்லியில் அதன் தோ்தல் இயந்திரங்களின் தயாா்நிலை குறித்து தோ்தல் ஆணையம் புதன்கிழமை மதிப்பாய்வு செய்தது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. 70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னா் தோ்தல்கள் நடத்தப்பட உள்ளன.