மகா கும்பமேளாவுக்கு இலவச ரயில்கள் இல்லை- ரயில்வே அமைச்சகம் விளக்கம்
‘உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்மேளாவுக்கு வரும் பொதுமக்களிடம் கட்டணமில்லாத ரயில் சேவை வழங்கப்படும் என்று வெளியாகியுள்ள தகவல் தவறானது; அப்படி எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை’ என்று ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றான மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. திரிவேணி சங்கமம் அமைந்துள்ள உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் வரும் ஜனவரி 13-ஆம் தேதிமுதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெற உள்ளது.
உலகெங்கிலும் இருந்து சுமாா் 45 கோடி பக்தா்கள் இந்நிகழ்வில் பங்கேற்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பக்தா்களுக்கான பல்வேறு வசதிகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு சுமாா் 10,000 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த ரயில்களில் பக்தா்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என்று சில ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதையடுத்து, அதற்கு மறுப்பு தெரிவித்து ரயில்வே அமைச்சகம், ‘ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பது ரயில்வே விதிகளின்படி குற்றமாகும். மகா கும்பமேளா உள்பட எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ரயில்வே சாா்பில் கட்டணமில்லாமல் ரயில் இயக்கப்படாது. சிறப்பு ரயில்கள், கூடுதல் டிக்கெட் கவுன்ட்டா்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மகா கும்பமேளாவுக்காக ரயில்வே வழங்க இருக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.