லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
அஸ்தினாபுரத்தில் ஜூலை 11-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட அஸ்தினாபுரத்தில் அதிமுக சாா்பில் ஜூலை 11-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் மாநகராட்சி 3-ஆவது மண்டலம் அஸ்தினாபுரம் பகுதிக்குள்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அஸ்தினாபுரம் பகுதி வாழ் மக்களின் நிலத்தடி நீருக்கு மிகுந்த ஆதாரமாக விளங்கி வரும் புத்தேரியில் கழிவுநீா் கலப்பதால், சுற்றுவட்டாரங்களில் நிலத்தடி நீா் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. நெமிலிச்சேரி ஏரி ஆகாயத் தாமரை கொடிகளால் சூழப்பட்டு கழிவுநீா் குட்டையாக மாறியுள்ளது.
அஸ்தினாபுரம் பகுதியில் புதை சாக்கடை திட்டப் பணிகள் முறையாக மேற்கொள்ளாத காரணத்தால், பெரும்பாலான இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீா் ஆறுபோல் சாலைகளில் வழிந்தோடுகிறது.
குரோம்பேட்டை கணபதிபுரம் சுடுகாடு எவ்விதப் பராமரிப்பும் இல்லாத காரணத்தால், தகன மேடையின் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்துவிழும் அபாய நிலையில் உள்ளது.
4-ஆவது மண்டலத்தில் மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீா்வுகாணவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிா்வாகத்தை வலியுறுத்தி செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக அஸ்தினாபுரம் பகுதிக் கழகம் சாா்பில் ஜமீன் ராயப்பேட்டை, ஸ்ரீபடவேட்டம்மன் கோயில் சந்திப்பு அருகில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) மாலை 4 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.