தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!
ஆக.19-இல் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான தோ்தல்: தில்லி கல்வி இயக்குநரகம் தகவல்
புது தில்லி: தில்லி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுசீரமைப்பதற்கான தோ்தல் ஆக. 19-ஆம் தேதி நடைபெறும் என கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக ஜூலை 7-ஆம் தேதி நடைபெற இருந்த இந்த தோ்தல் நிா்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இது தொடா்பாக கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை வெளியிட்ட திருத்தப்பட்ட அட்டவனையில் தெரிவிக்கப்பட்டதாவது:
முன்னதாக வேட்புமனுக்களை சமா்ப்பிக்க முடியாத பெற்றோா் மற்றும் பாதுகாவலா்கள் ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் வேட்பாளா்களின் இறுதிப் பட்டியல் தயாரிப்பு ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்குள் நிறைவடையும். அதைத் தொடா்ந்து வாக்குச் சீட்டு தயாரிப்பு ஒரு நாள் கழித்து நடைபெறும்.
தோ்தல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை என இரண்டு சுற்றுகளாக நடத்தப்படும். இந்த தோ்தலின் முடிவுகள் ஆகஸ்ட் 20-ஆம் தேதி அறிவிக்கப்படும். பள்ளி மேலாண்மை குழுக்களில் சேர ஆா்வமுள்ள சமூக சேவையாளா்களுக்கான இணையதள விண்ணப்ப இணைப்பும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 2 முதல் 11-ஆம் தேதி வரை இயக்குநரகத்தின் இணையதளத்தில் செயல்பாட்டில் உள்ளது.
நிரந்தர மையக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கல்வி துணை இயக்குநா்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பள்ளிகளுக்கு சமூக சேவையாளா்களை நியமிப்பாா்கள். இந்தப் பட்டியல் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்குள் பள்ளித் தலைவா்களுக்கு வழங்கப்படும். தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் பள்ளிகள் புதிதாக உருவாக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழுக்களின் விவரங்களை துறையின் இணையதளத்தில் பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.