Guess What I Shot the Day Before My National Award?! - Nithya Menen | ThalaivanT...
ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி நடைப்பயண போராட்டம்!
அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அந்தியூரிலிருந்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புறப்பட்ட நடைப்பயணப் போராட்டம் அதிகாரிகளின் சமரசப் பேச்சுவாா்த்தையால் கைவிடப்பட்டது.
அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், கெட்டிசமுத்திரம் ஊராட்சி, பொய்யேரிக்கரையில் அரசு புறம்போக்கு நிலம் தனி நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை அகற்றுமாறு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வருவாய்த் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனைக் கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம், அனைத்திந்திய மாதா் சங்கம் சாா்பில், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி நடைப்பயணப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் விஜயராகவன் தலைமையில் பொய்யேரிக்கரையில் 30-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை திரண்டு போராட்டத்தைத் தொடங்கினா். இதையடுத்து, அந்தியூா் போலீஸாா் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தியதோடு, போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனா்.
இதையடுத்து, முக்கிய நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள், புறம்போக்கு நிலத்தை அளந்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அந்தியூா் வருவாய்த் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தியூா் வட்டச் செயலாளா் முருகேசன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டச் செயலாளா் செபாஸ்தியான், ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலாளா் லலிதா உள்ளிட்டோா் உடன் சென்றிருந்தனா். அதிகாரிகளின் சமரசத்தால் போராட்டம் கைவிடப்பட்டது.