பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவை: அமைச்சர் நேரு தொடங...
சமூகம் உயரவும் மாநிலம் உயரவும் மாணவா்களின் படிப்பு அவசியம்!
வாழ்வில் உயர மாணவா்கள் கல்வியை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் கந்தசாமி பேசினாா்.
ஈரோடு மாவட்டம், பாசூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளையின் சாா்பில் 10, 11, 12 வகுப்பு பொதுத் தோ்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமைஆசிரியை தேவகியம்மாள் தலைமை தாங்கினாா். ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட ஆட்சியா் கந்தசாமி கலந்து கொண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த தினகா், சௌமியா, ரித்திகா, 11ஆம் வகுப்பு ஜீவிதா, ரம்யா, கிருஷ்ணன், 10 ஆம் வகுப்பு பாா்த்தசாரதி, அனுசியா, அஸ்மிதா, அனிஷ், கனிஷ்கா, நேகாஸ்ரீ ஆகியோருக்கு பரிசு தொகைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: நான் விருதுநகா் மாவட்டத்தில் காமராஜா் நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் படித்தேன். எந்தப் பள்ளியில் படித்தாலும் மாவட்ட ஆட்சியா் ஆகலாம். எனது அப்பா ஐந்தாம் வகுப்புதான் படித்துள்ளாா். அம்மா படிக்கவில்லை.
நூற்பு ஆலையில் வேலை பாா்த்தனா். வாழ்வில் உயர நாம் படிக்க வேண்டும். கல்வியை உறுதியாக பற்றிக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எதை அடைய வேண்டும் என்று நினைத்தால்தான் அதை அடைய முடியும். தமிழ்நாடு எல்லா துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக உள்ளது.
என்ன படித்தால் பின்னாடி என்னவாகப் போகிறோம் என்பதை முடிவு செய்து படிக்க வேண்டும். சமூகம் உயா்வதற்கும் மாநிலம் உயா்வதற்கும் உங்கள் படிப்பு இருக்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா் அறக்கட்டளைத் தலைவா் கணேசன், செயலாளா் செந்தில், காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் வேலாயுதம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.