மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் -கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி
ஆசிரியர்களையே தேர்ந்தெடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் எதற்கு?: ராமதாஸ்
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு ஆசிரியரைக் கூட தேர்வு செய்ய முடியவில்லை என்றால் அந்த வாரியம் எதற்காக இருக்க வேண்டும். அதை மூடி விடலாமே? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசுப் பணிக்கு ஆள்கள் எவ்வளவு வேகத்தில் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் தான் மோசமான எடுத்துக்காட்டு ஆகும். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த ஆண்டில் ஒரே ஒரு ஆசிரியர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. 2025-ஆம் ஆண்டு பிறந்து மூன்றாவது மாதம் தொடங்கிவிட்ட நிலையில், இன்று வரை நடப்பாண்டிற்கான ஆண்டுத் திட்டம் வெளியிடப்படவில்லை. ஆசிரியர்களை நியமிப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் காட்டும் அலட்சியம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டில் 3192 பட்டதாரி ஆசிரியர்கள், 2768 இடைநிலை ஆசிரியர்கள், 200 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 4000 கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், 56 சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட 10, 355 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு முழுவதும் ஒரே ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மை.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி அரசு பள்ளிகளுக்கு 3192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அவர்களை தேர்ந்தெடுக்கும் பணி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முடிவடைந்தது. ஆனால், இன்னும் அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்படவில்லை. அதேபோல், கடந்த ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரே ஆள்தேர்வு அறிவிக்கை 2768 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக வெளியிடப்பட்ட அறிவிக்கை தான். ஆனால், அந்தப் பணிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டாலும் கூட, இன்று வரை விடைத்தாள்கள் திருத்தப்படவில்லை.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அதன் பின் ஓராண்டாகியும் இன்று வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டு அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2024 மார்ச் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்படி நடக்கவில்லை. 2024 ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய தகுதித் தேர்வும் நடக்கவில்லை.
ஜப்பானில் பற்றியெரியும் காட்டுத்தீ!
2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு இன்று வரை 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி பெற்று வெளிவந்துள்ளனர். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால் அவர்கள் ஆசிரியர் பணிக்கான தகுதியை பெற முடியவில்லை. அதனால் தனியார் பள்ளிகளில் கூட அவர்களால் பணிக்கு சேர முடியவில்லை.
கடந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை அண்மையில் தான் வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு கடுமையாக எச்சரித்த பிறகும் தான் அதுவும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்ட தேதியில் நடக்குமா? என்பதும் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை குறித்த நேரத்தில் தேர்வு செய்ய வேண்டும் என்பது தான். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு ஆசிரியரைக் கூட தேர்வு செய்ய முடியவில்லை என்றால் அந்த வாரியம் எதற்காக இருக்க வேண்டும். அதை மூடி விடலாமே? தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மீது அரசுக்கு கொஞ்சமாவது அக்கறை இருந்தால் தேர்வு நடத்தப்பட்ட ஆசிரியர் பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.