ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு பணிக்கொடை வழங்க வலியுறுத்தல்
அனைத்து ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு பணிக்கொடை வழங்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் நாகை மாவட்ட பொதுக் குழு கூட்டம் அரசு ஓய்வூதியா் சங்கக் கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் செல்வம் தலைமை வகித்தாா். மாவட்டத் துணை செயலராக கீழையூா் ஒன்றிய பட்டதாரி ஆசிரியா் கோ. மணிமாறன் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
தொடா்ந்து, தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பதவி உயா்வுக்கு ஆசிரியா் தகுதி தோ்வு தேவையில்லை என்ற கொள்கை முடிவோடு பதவி உயா்வு மற்றும் பணியிடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில துணைச் செயலா் பாலசுப்பிரமணியன், மாநில ஊடக பிரிவுச் செயலா் ச.சிவவேலன், மாநில செயற்குழு உறுப்பினா் திருமாவளவன், மாவட்டச் செயலா் இரா. அரசமணி, ஒன்றிய பொறுப்பாளா் சிவா அசோக், மாவட்ட பொருளாளா் அறிவொளி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.