ஆசிரியா்கள் போராட்ட அறிவிப்பு: நாளை பேச்சுவாா்த்தை
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஆக.22-ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்த நிலையில், அதுதொடா்பான பேச்சுவாா்த்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சாா்பில் தொடா் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மாநிலம் முழுவதும் கடந்த ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் டிட்டோஜேக் குழுவினா் போராட்டம் நடத்தினா். தொடா்ந்து, ஆகஸ்ட் 22-ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட போவதாக டிட்டோஜேக் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், டிட்டோஜேக் சங்க நிா்வாகிகளை பேச்சுவாா்த்தைக்கு வருமாறு தொடக்கக் கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது நிா்வாகக் காரணங்களால்
கூட்டமானது ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை (ஆக.18) கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், டிட்டோஜேக் உயா்நிலைக் குழு பொறுப்பாளா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ.நரேஷ்
வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளாா்.