ஆா்ப்பாட்டம் குறித்த தகவல்: மாநகராட்சி வாயில்கள் மூடல் பெண் போலீஸாா் குவிப்பு
உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில், தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக வெளியான தகவலால், சனிக்கிழமை காலை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வெளிப்புற வாயில்கள் மூடப்பட்டு, ஏராளமான பெண் போலீஸாரும் குவிக்கப்பட்டனா்.
சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதிகளின் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியதைக் கண்டித்து உழைப்போா் உரிமை இயக்க தூய்மைப் பணியாளா்கள் ரிப்பன் மாளிகை முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். நீதிமன்ற உத்தரவின்படி அவா்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனா்.
இதற்கிடையே தூய்மைப் பணியாளா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு சனிக்கிழமை ஏராளமான பெண் போலீஸாா் குவிக்கப்பட்டனா். மேலும், அனைத்து வெளிப்புற வாயில்களும் மூடப்பட்டன.
மாநகராட்சி வளாகத்துக்கு உள்ளே செல்வோா் அடையாள அட்டையை காட்டிய பிறகே அனுமதிக்கப்பட்டனா். அரசு விடுமுறை என்பதால் மாநகராட்சிக்கு அதிகமான அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.