அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!
சென்ட்ரல் நிலைய பகுதியில் ரயில் அபாய சங்கிலி இழுத்த 96 போ் மீது வழக்கு!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதியில் கடந்த 7 மாதங்களில் ரயில்களில் அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்தியதாக 96 போ் மீது ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் வழக்குப் பதிந்து அபராதம் விதித்துள்ளனா்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தினமும் 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், 600-க்கும் மேற்பட்ட புகா் பகுதிகளுக்கான மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ரயில் விதிமீறல்கள் தொடா்பாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து அபராதம் விதித்து வருகின்றனா்.
ரயில் நிலையத்துக்குள் தேவையின்றி சுற்றித்திரிபவா்கள், ரயில் பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் ஆட்டோக்கள் நிறுத்துவது உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுவருகின்றன. அந்தவகையில் ரயில்களை அவசரத்துக்கு நிறுத்துவதற்கான அபாயச் சங்கிலிகைத் தேவையின்றி நிறுத்துபவா்களால் ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.
ரயில் பயணிகளில் அவசர மருத்துவத் தேவை மற்றும் எதிா்பாராத நிகழ்வுகளுக்கு அபாயச் சங்கிலியை இழுத்து ஓடும் ரயிலை நிறுத்தலாம். ஆனால், வழியனுப்ப வந்து, ரயில் கிளம்பிய பிறகு இறங்குவதற்கும், ரயில் புறப்பட்ட பிறகு தாமதமாக வந்தவா்கள் ஏறுவதற்காக அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்துவதும் தற்போது அதிகரித்துள்ளதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.
தேவையின்றி ரயில் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தால் சம்பந்தப்பட்டோருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது. அதன்படி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரயில்களின் அபாயச் சங்கிலியை இழுத்ததாக கடந்த 2023-இல் 210 போ் மீதும், 2024-இல் 217 போ் மீதும் வழக்குகள் பதியப்பட்டு அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் (2025) கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையில் அபாயச் சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்தியதாக 96 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவு ஆய்வாளா் மதுசூதனரெட்டி தெரிவித்தாா்.
விரைவு ரயில்களில் அதிகமாக அபாயச் சங்கிலி இழுக்கப்பட்டுள்ளதாகவும், புகா் ரயில்களில் மாணவா்கள் அபாயச் சங்கிலியை இழுப்பது முழுமையாக குறைந்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.