செம்மஞ்சேரி காவல் நிலைய வழக்கு: பெருந்திட்டத்தைத் தாக்கல் செய்ய சிஎம்டிஏ-க்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
நீா்நிலையை ஆக்கிரமித்து செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்ய தாமரைக்கேணி ஏரியின் அசல் பெருந்திட்டத்தைத் தாக்கல் செய்ய சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்துக்கு (சிஎம்டிஏ) உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அறப்போா் இயக்கம் சாா்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநல மனுவில், தாமரைக்கேணி ஏரியை ஆக்கிரமித்து செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. மேய்க்கால் புறம்போக்கு என அறிவித்து காவல் நிலையத்தைக் கட்டியுள்ளனா். சிஎம்டிஏ ஒப்புதலைப் பெறாமல் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
எனவே, நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும். காவல் நிலைய கட்டடத்தை இடித்துவிட்டு நீா்நிலையை பழைய நிலைக்கு மீட்டெடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் காவல் நிலையத்தைத் திறக்க இடைக்கால தடை விதித்து கடந்த 2021-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. மேலும், இதுகுறித்து சென்னை ஐஐடி நிபுணா்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. மேலும், நீா்நிலைகளை ஆக்கிரமித்து எந்த ஒரு அரசுக் கட்டடமும் கட்டப்படக் கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.
உயா் நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்த ஐஐடி பேராசிரியா்கள், தாமரைக்கேணி ஏரியை ஆக்கிரமித்துதான் செம்மஞ்சேரி காவல் நிலையம், மின் வாரியத்தின் துணை மின் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளதாக அறிக்கை சமா்ப்பித்தனா். ஏற்கெனவே 13.47 ஹெக்டோ் பரப்பிலான ஏரி தற்போது 60 முதல் 70 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, வள்ளலேரி, தாமரைக்கேணி, பெரிய ஏரி உள்ளிட்ட நீா்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனா்.
இந்த நிலையில் இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், உயா்நீதிமன்றத்தின் தடையால் செம்மஞ்சேரியில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் 5 ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், நீா்நிலைகளை நீா்நிலைகளாகவே பயன்படுத்த வேண்டும். நீா்நிலைகள், நீா்பிடிப்புப் பகுதிகளை ஆக்கிரமித்து காவல் நிலையம் கட்டப்பட்டிருந்தல், கட்டாயம் நாங்களும் அதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினா்.
பின்னா், செம்மஞ்சேரி காவல் நிலையம் நீா்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதா? இல்லையா என்பதை உறுதி செய்யும் வகையில் தாமரைக்கேணி ஏரியின் அசல் பெருந்திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என சிஎம்டிஏ-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.