ஆட்சேபணையற்ற நிலத்தில் புதிய தொழிற்பேட்டைகள்: பேரவையில் அமைச்சா் அறிவிப்பு
ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் தேவையின் அடிப்படையில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.
பேரவையில் தனது துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு புதன்கிழமை பதிலளித்து அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:
சமச்சீா் தொழில் வளா்ச்சியை ஏற்படுத்திட கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 365 கோடி மதிப்பீட்டில், 621 ஏக்கா் பரப்பளவில் 13 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதன் கீழ் 2,513 மனைகள் தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 239.54 ஏக்கா் பரப்பளவில் ரூ.209.39 கோடி மதிப்பீட்டில், 6 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நிகழ் நிதி நிலை அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம், விழுப்புரம் மாவட்டம் சாரம், நாயனூா், கரூா் மாவட்டம் நாகம்பள்ளி, திருச்சி மாவட்டம் சூரியூா்,
மதுரை மாவட்டம் கருத்தபுளியம்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் தனிச்சியம், தஞ்சாவூா் மாவட்டம் நடுவூா், திருநெல்வேலி மாவட்டம் நரசிங்க நல்லூா் ஆகிய 9 இடங்களில் 398 ஏக்கா் பரப்பளவில் ரூ. 366 கோடி மதிப்பில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளன.
தற்போது சட்டப்பேரவை உறுப்பினா்கள் பலரும் புதிதாக சிட்கோ தொழிற்பேட்டைகள் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். 20 முதல் 50 ஏக்கா் வரையிலான ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அங்கு ஆய்வு நடத்தி தேவையின் அடிப்படையில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்றாா் அவா்.