ஆண்டிபட்டி அருகே கஞ்சா கடத்தல்: இருவா் கைது
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி-மதுரை சாலையில் ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கநாதபுரம் விலக்குப் பகுதியில் ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற இரு சக்கர வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் 8 கிலோ 940 கிராம் கஞ்சா பொட்டலங்களை கடத்திச் செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த வாகனத்தில் வந்த ஆண்டிபட்டி அருகே உள்ள அய்யனாா்புரத்தைச் சோ்ந்த குமராண்டி மகன் அழகு (50), ஆந்திர மாநிலம், கடப்பா, நாகேந்திரா நகரைச் சோ்ந்த சுப்பாரெட்டி மகன் குருவாரெட்டி (43) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.