Doctor Vikatan: பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட வலது கை... மீண்டும் பழையநிலைக்குத் த...
ஆதிதிராவிட மக்களுக்கு விரைந்து மனைப்பட்டா வழங்க துணைநிலை ஆளுநா் அறிவுரை
ஆதிதிராவிட மக்களுக்கு விரைந்து மனைப்பட்டா வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவிட்டாா்.
புதுவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த சீராய்வுக் கூட்டம் துணைநிலை ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் தேசிய செயலா் குடே சீனிவாஸ் கலந்து கொண்டு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா். துறைச் செயலா் டாக்டா் முத்தம்மா துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினாா்.
புதுச்சேரி மாநிலத்தில் - 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மொத்த மக்கள் தொகையில் 15.7 சதவிகிதம் அட்டவணை இனத்தவா் உள்ளனா். அரசு பட்ஜெட்டில், திட்டசெலவின ஒதுக்கீடு ரூ. 2176 கோடியில் ரூ. 525 கோடி சிறப்பு கூறு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது திட்ட செலவில் 24 சதவிகிதம் ஆகும். இது நிதி ஆயோக் வழிகாட்டுதலின்படி உள்ள 16 சதவிகிதத்தை காட்டிலும் கூடுதல் நிதி ஆகும் என்று விளக்கினாா்.
மேலும், துறையில் செயல்படுத்தப்படும் 25 நலத் திட்டங்கள் பற்றி விளக்கினாா்.
கூட்டத்தில் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பேசியது :
இந்த ஆண்டு சிறப்புக்கூறு நிதியை 100 சதவிகிதம் செலவு செய்வதுடன் அதனை விரைவுபடுத்த வேண்டும். துறையின் மூலமாக கையகப்படுத்தப்பட்டு உள்ள நிலங்களை, விரைவில் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணப்பட்டு மற்றும் திம்ம நாயக்கன் பாளையத்தில் இலவச மனைப்பட்டா வழங்குவதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து உள்ள நிலையில் அதை இந்த மாத இறுதிக்குள் வழங்க வேண்டும்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு புதுச்சேரி நகரப் பகுதியில் கூடுதலாக தங்கும் விடுதிகள் கட்ட நடவடிக்கை எடுத்க வேண்டும்.
கிராமப் புறங்களில் செயல்பட்டு வரும் விடுதிகளில் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்டு உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
தலைமைச் செயலா் டாக்டா் சரத் சௌகான், துணைநிலை ஆளுநரின் செயலா் டாக்டா் மணிகண்டன், தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் தமிழகம், கேரளம், புதுச்சேரி மண்டல இயக்குநா் ரவிவா்மன், ஆதிதிராவிடா் நலத்துறை இயக்குநா் இளங்கோவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.