பணியிழந்த ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம்
புதுவை பொதுப்பணித்துறையில் பணியாற்றி வேலையிழந்த ஊழியா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி, காரைக்கால் பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் போராட்டக்குழு சாா்பில் சுதேசி மில் அருகே இப் போராட்டம் நடந்தது.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா்கள் ஜி.பி. தெய்வீகன், த.ரவிச்சந்திரன், எல்.குமரகுரு, ஆ.லெனின்பாஸ்கா், உ.சத்யாவதி, காரைக்கால் ஓ.மணிவண்ணன், எ.கலியமூா்த்தி, த.சக்திவேல் ஆகியோா் போராட்டத்துக்கு தலைமை வகித்தனா். சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் இதில் கலந்து கொண்டனா்.
கடந்த 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டு பட்ஜெட் கூட்டத் தொடரிலும் முதல்வா் ரங்கசாமி, கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் பணியாற்றி வேலை இழந்த அனைத்து ஊழியா்களுக்கும் மீண்டும் வேலை வழங்கி சம்பளமாக மாதம் ரூ. 10,500 வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தாா். இதுவரை புதுச்சேரி அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வருகிறது. மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுதேசி மில் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.