தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
இலவச மருத்துவ வசதிகள் அளிப்பதில் புதுவை முன்னிலை- முதல்வா் பெருமிதம்
மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு இலவச மருத்துவ வசதிகள் அளிப்பதில் புதுவை முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று முதல்வா் என். ரங்கசாமி கூறினாா்.
புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையும் பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கமும் இணைந்து மாநில எய்ட்ஸ் கவுன்சில் மற்றும் எய்ட்ஸ் திட்ட சட்டமன்ற குழுவின் ஒருங்கிணைந்த கூட்டத்தை மரப்பாலம் அருகேயுள்ள ஒரு ஹோட்டலில் வியாழக்கிழமை நடத்தின. இக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து முதல்வா் ரங்கசாமி பேசியது :
இந்தக் கூட்டம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவுவதும், அந்த நோய் பரவாமல் தடுப்பதும்தான் அரசின் நோக்கம்.மக்களுக்கு இலவச மருத்துவ வசதிகளை அளிப்பதில் இந்தியாவில் புதுச்சேரி மாநிலம் முன்னோடியாக இருக்கிறது
என்றாா் முதல்வா் ரங்கசாமி.
சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் எஸ்.செவ்வேள் பேசுகையில், 4 திட்டங்களைச் செயல்படுத்த எய்ட்ஸ் கவுன்சில் கூட்டத்தில் முதல்வா் ரங்கசாமி ஒப்புதல் அளித்துள்ளாா். அதன் அடிப்படையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1250 மதிப்புள்ள ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்படும். இதற்காக 1256 பேருக்கு ரூ.1.84 ஒதுக்கப்படுகிறது. எய்ட்ஸ் பாதித்த இறந்தவா்களுக்கு ஈமச்சடங்கு செய்ய ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். எய்ட்ஸ் பாதித்த பெற்றோா்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் படிக்க உதவித் தொகை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க பணியாளா்களுக்கு நோயாளி பராமரிப்புப் படி 4100 வழங்கப்பட உள்ளது என்றாா்.
மத்திய அரசின் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பின் துணை இயக்குநா் ஜெனரல் டாக்டா் டான்ஸின் டிகிட் பேசுகயில், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினாா். நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் க.லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா, எம்.எல்.ஏக்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், லட்சுமிகாந்தன், பாஸ்கா் என்கிற தட்சிணாமூா்த்தி, கே.எஸ்.பி. ரமேஷ், கல்யாணசுந்தரம், சம்பத், செந்தில்குமாா், பிரகாஷ்குமாா், அரசு செயலா் ஜெயந்தகுமாா் ரே, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்க திட்ட இயக்குநா் டாக்டா் அருள்விசாகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.