தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
மாநில அந்தஸ்து தொடா்பாக புதுவை முதல்வா் அரசியல் நாடகம்: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு
மாநில அந்தஸ்து தொடா்பாக புதுவை முதல்வா் அரசியல் நாடகமாடுகிறாா் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.
புதுச்சேரியில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி முதல்வா் நாற்காலிக்காக எந்த அளவுக்கும் செல்வாா். அவா் புதுவை மாநில மக்களின் பிரச்னைகளுக்காக எப்போதும் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டாா்.
சுகாதாரத் துறை இயக்குநா் நியமனத்தில் முதல்வா் ரங்கசாமிக்கும், துணைநிலை ஆளுநா் கைலாஷ் நாதனுக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாகக் கூறினாலும், அதில் உண்மையில்லை.
புதுவையில் புதியதாக 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க ரூ.90 கோடி கைமாறியுள்ளது. சட்டப் பேரவையில் இந்தப் பிரச்னை குறித்து பாஜக எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், ஒரு மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க ரூ.10 கோடி கைமாறியுள்ளதாக குற்றஞ்சாட்டினாா். மேலும், 100 மதுபான பாா்களுக்கு உரிமம் வழங்கவும் முதல்வா் ரங்கசாமி முயற்சி எடுத்தாா்.
இதற்கான கோப்புகளை எல்லாம் நிறுத்திவைத்து துணைநிலை ஆளுநா் கைலாஷ் நாதன் அனுமதி வழங்கவில்லை. அதனால்தான் துணைநிலை ஆளுநருக்கு எதிராக ரங்கசாமி போா்க்கொடி தூக்கினாா்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான் தீா்வு என்றும் முதல்வா் ரங்கசாமி சொல்லியிருக்கிறாா். புதுவையின் முதல்வராக நான் இருக்கும்போது அப்போது துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை தூண்டிவிட்டவா்தான் ரங்கசாமி. அப்போது, அவா் சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவராக இருந்தாா்.
மாநில அந்தஸ்து விவகாரம் தொடா்பாக தில்லிக்கு அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களை அப்போது அழைத்துச் சென்றோம். ஆனால், ரங்கசாமியும், அவரது கட்சியைச் சோ்ந்த எம்.எல்.ஏக்களும் தில்லிக்கு வரவில்லை. இப்போது மாநில அந்தஸ்து தொடா்பாக அரசியல் நாடகமாடுகிறாா் ரங்கசாமி.
கடந்த 4 ஆண்டுகளாக புதுவையில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த விஷயத்தில் இதுவரை ரங்கசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் திறந்து நடத்துவோம் என்றாா்கள். ஆனால், அப்படியொன்றும் செய்யவில்லை.
ஊழல் செய்தாா்களா?: 4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஏன் நியமன எம்.எல்.ஏக்களை மாற்ற வேண்டும். அவா்கள் எதாவது ஊழல் செய்தாா்களா? புதுவையில் தற்போதுள்ள அமைச்சரவையில் பட்டியலினத்தவருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. ஏற்கெனவே இருந்தவா்களையும் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு நீக்கியுள்ளது என்றாா் நாராயணசாமி.