ஆந்திரத்துக்கு செயற்கை பவளப்பாறைகள் அனுப்பும் பணி தீவிரம்
கடலூா் துறைமுகத்தில் இருந்து ஆந்திர கடல் பகுதிக்கு கோட்டியா சரக்கு கப்பல்கள் மூலம் செயற்கை பவளப்பாறைகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பவளப்பாறைகள் பல கடல் உயிரினங்களின் வசிப்பிடமாக திகழ்கின்றன. ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா மற்றும் பாக் ஜல சந்தி பகுதிகளில் இயற்கையாகவே பவளப்பாறைகள் உள்ளன.
பவளம் என்ற உயிரினம் கால்சியம் திரவத்தை சுரந்து, அது பாறையாக உருவெடுக்கும். இவ்வகை பாறைகள் மீன்களுக்கு மட்டுமல்ல, கடல் வாழ் உயிரினங்களான டால்பின், கடல் குதிரை, கடல் பசு, ஆமை உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழ்வதற்கு வழி ஏற்படுத்தி வருகிறது.
ஆனால், பவளப்பாறைகள் எல்லா இடத்திலும் உருவாகுவது இல்லை. இதனால், செயற்கையான முறையில் செய்யப்பட்ட பவளப்பாறைகள் தோ்ந்தெடுக்கப்பட்ட கடல் பகுதியில் படகுகளில் எடுத்துச் சென்று வைக்கப்படுகிறது. இந்த செயற்கை பவளப்பாறைகள் மீது பாசி வளா்ந்து சிறிய மீன்களுக்கு உணவாகிறது. மேலும், பெரிய மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு உறைவிடமாகவும், மறைவிடமாகவும், இனவிருத்திக்கு ஏற்ற இடமாகவும் அமைகிறது.
கடலூா் துறைமுகம் பகுதியில் செயற்கை பவளப்பாறைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பெரிய குழாய், முக்கோணம் போன்ற வடிவங்களில் சிமென்ட் கலவை கொண்டு பவளப்பாறை தயாா் செய்யப்படுகிறது.
இந்தப் பவளப்பாறைகள் கோட்டியா என்ற சிறிய சரக்கு கப்பல்களில் ஏற்றிச் செல்லப்பட்டு புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளுக்கு அங்குள்ள தேவைகளுக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படுகிறது.
அந்த வகையில், கடலூா் முறைமுகத்தில் இருந்து கோட்டியா சரக்கு கப்பலில் செயற்கை பவளப்பாறைகளை ஆந்திரம், புதுவை மாநில கடல் பகுதிகளுக்கு ஏற்றி அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக லாரிகள் கொண்டுவரப்பட்ட செயற்கை பவளப்பாறைகள், கிரேன் உதவியுடன் கோட்டியா சரக்கு கப்பலில் ஏற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஒரு கோட்டியா சரக்கு கப்பலில் 400-க்கும் மேற்பட்ட செயற்கை பவளப்பாறைகள் ஏற்றப்படுகிறது.
இந்தக் கப்பலில் ஒரு கேப்டன், மாலுமி, உணவு தயாா் செய்பவா் உள்பட 7 போ் பயணிக்க உள்ளனா். பவளப்பாறைகள் ஏற்றப்பட்ட கோட்டியா கப்பல் 3 நாள் பயணத்துக்குப் பின்னா் ஆந்திர மாநிலத்தை சென்றடையும் என்றனா்.