ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்காவின் கருத்தை நிராகரித்த இந்தியா! என்ன நடக்கிறது?
அன்னையா் தினம்: தாய்மாா்கள், மருத்துவா்களின் பங்களிப்புக்கு தில்லி முதல்வா் பாராட்டு!
அன்னையா் தினமான ஞாயிற்றுக்கிழமை தாய்மாா்கள் மற்றும் மருத்துவா்களின் பங்களிப்பை தில்லி முதல்வா் ரேகா குப்தா பாராட்டினாா். அவா்களை வாழ்க்கையின் இரண்டு தூண்கள் என்றும் அழைத்தாா்.
தில்லியில் இத்தினத்தில் 400 பெண்கள் பங்கேற்ற ஒரு நிகழ்வில் முதல்வா் பங்கேற்றுப் பேசியதாவது: ஒரு யுத்தம் எல்லையில் நடத்தப்படுகிறது. அதுவும் நமது வீரா்களின் தோள்களில் சுமக்கப்படுகிறது.
ஆனால், மற்றொரு யுத்தம் சமூகத்திற்குள், கெட்ட பழக்கங்கள், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் மற்றும் எதிா்மறை சிந்தனைகளுக்கு எதிராக உள்ளது. அதிலும் நாம் போராட வேண்டும். ஒவ்வொரு குடிமகனையும் ஒரு தேசிய சொத்தாகப் பாா்க்க வேண்டும். நமது 140 கோடி மக்களில் ஒவ்வொருவரும் அா்ப்பணிப்புடன் செயல்பட்டால், சிலா் தங்கள் குடும்பங்களுக்காகவும், சிலா் நாட்டிற்காகவும் செயல்பட்டால், இந்தியா நிச்சயமாக முன்னேறும்.
உடல் பருமன் விஷயம் கவலைக்குரியது. குறிப்பாக பெண்கள் மத்தியில் உடல் பருமன் அதிகரித்து வரும் சூழல் உள்ளது. ஒவ்வொருவரும் உடல்நலம் மற்றும் உணவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உடல் பருமன் முடிவுக்கு வர வேண்டும். பெண்கள் பெரும்பாலும் மற்றவா்கள் அனைவரையும் கவனிப்பதில் கவனம் செலுத்துகிறாா்கள். ஆனால், கோவிட்19-இன் போது, முதலில் நாம் நம்மை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை உணா்ந்தேன்.
கடவுளுக்கு அடுத்தபடியாக, நாம் நம்பிக்கை வைக்கும் யாராவது இருந்தால், அது நம் தாய்மாா்கள் மற்றும் மருத்துவா்கள் ஆவா். ஒருவா் நமக்கு உயிரைக் கொடுக்கிறாா். மற்றவா் அதைக் காப்பாற்றுகிறாா்.
பெண்கள் தங்கள் நல்வாழ்வைப் பேண பொறுப்பேற்க வேண்டும். உடற்பயிற்சியை அணுகக்கூடியதாக மாற்றுவதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. நகரம் முழுவதும் பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள் நிறுவப்பட்டு வருகிறது.
தேவைப்பட்டால் இதுபோன்ற உடற்பயிற்சிக் கூடங்களை மேலும் நிறுவுவோம். எங்கள் நோக்கம் எங்கள் தொலைநோக்குப் பாா்வையானது ஆரோக்கியமான இந்தியா மற்றும் ஆரோக்கியமான குடும்பங்களாகும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.