முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்:...
சைக்கிளில் மீது டெம்போ மோதியதில் இளைஞா் சாவு!
வடக்கு தில்லியின் வெளிப்பகுதியில் உள்ள ஆசாத்பூா் மண்டி பகுதிக்கு அருகே டெம்போ ஒன்று சைக்கிள் மீது மோதியதில் 36 வயது நபா் உயிரிழந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: சனிக்கிழமை அதிகாலையில், பாதிக்கப்பட்டவா் தனது பக்கத்து வீட்டுக்காரா் ஒருவருடன் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவித்தாா்.
உயிரிழந்தவா் திலீப் ஷா (36) என அடையாளம் காணப்பட்டாா். சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு விபத்து தொடா்பாக பிசிஆா் அழைப்பு வந்தது. உடனடியாக போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
பாதிக்கப்பட்டவரின் பக்கத்து வீட்டுக்காரா், அவா்கள் அதிகாலை 5 மணிக்கு ஆசாத்பூா் மண்டிக்குச் செல்வதற்காக தங்கள் வீடுகளில் இருந்து சைக்கிளில் புறப்பட்டதாகவும், அதிகாலை 5.30 மணியளவில் லிபாஸ்பூா் பேருந்து நிலையத்தைக் கடந்து சென்றபோது, திலீப் ஷாவின் சைக்கிள் மீது பின்னால் இருந்து வந்து ஒரு டெம்போ மோதியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தாா்.
திலீப் ஷா சாலையில் விழுந்து மாா்பில் பலத்த காயம் அடைந்தாா். அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா் என்று பக்கத்து வீட்டுக்காரா் கூறினாா்.
இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டெம்போ ஓட்டுநரைக் கண்டுபிடிக்க பல குழுக்களை அமைத்துள்ளதாக அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.