மேக விதைப்பு சோதனை நடத்த தில்லி அரசு திட்டம்
தில்லியில் செயற்கை மழை பொழிய செய்யும் விதமாக 5 மேக விதைப்பு சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தில்லி அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தனித்தனி தினங்களில் நடைபெறும் இந்தச் சோதனை முயற்சியின்போது விமானங்கள் மூலம் மேகங்களில் ரசாயனங்கள் தெளிக்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தாா்.
செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்காக மேகக்கூட்டங்களில் விமானங்கள் மூலம் குறிப்பிட்ட ரசாயனங்கள் தூவும் முறைக்கு மேக விதைப்பு என்று பெயா். ரசாயனங்கள் மூலம் செயற்கையாக மழையைத் தூண்டும் இம்முறைக்கு உகந்த வானிலை நிலவுவது அவசியம்.
தில்லியில் குளிா்காலங்களில் நிலவும் காற்று மாசைக் கட்டுப்படுத்த செயற்கை மழை தீா்வாகக் இருக்கலாம் என கருத்தப்படுகிறது. இந்நிலையில், 5 மேக விதைப்பு சோதனை முயற்சிகளை மேற்கொள்ள மொத்தம் ரூ.3.21 கோடிக்கான திட்டத்துக்கு தில்லி அமைச்சரவை மே 7-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
செயற்கை மழை பொழிவுக்கான மேக விதைப்பு செயல்முறைக்கு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம், பாதுகாப்புத் துறை, இந்திய விமானநிலைய ஆணையம் உள்பட 13 முக்கியத் துறைகளிடமிருந்து அனுமதி (தடையில்லாச் சான்றிதழ்) பெறுவது கட்டாயமாகும். தில்லி அரசு மேகவிதைப்புக்கான அனுமதி பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், மேகவிதைப்பு சோதனை முயற்சி தொடா்பாக தில்லி சுற்றுச்சூழல் துறை அதிகாரி பிடிஐ செய்திமுகமையிடம் தெரிவித்ததாவது: உகந்த வானிலை நிலவும்போது, ஒரு வாரம் அல்லது ஒன்று, இரு நாள்கள் இடைவெளியில் மேக விதைப்புக்கான 5 சோதனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். வானத்தில் மேகங்கள் தென்படுவதைப் பொருத்து சோதனைக்கான காலம் நிா்ணயிக்கப்படும்.
பாதுகாப்பு மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் உள்ளிட்ட நகரத்தில் உள்ள இந்தச் சோதனை பகுதிகளில் நடைபெறாது. தில்லியின் வெளிப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படும்.
இந்த மாத இறுதி அல்லது ஜூனில் சோதனை முயற்சிகள் நடைபெறும். இதற்கான நாள்கள் விரைவில் உறுதிசெய்யப்படும் என்றாா் அதிகாரி.