பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
முழுமையான காஷ்மீரே நமது இலக்கு! - சச்சின் பைலட் சிறப்புப் பேட்டி
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் அப்பாவி பொதுமக்களைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மத்தியஅரசுக்கு ஆதரவாக உள்ளன. ஆனால், இந்தியா, பாகிஸ்தான் இடையே அண்மையில் ஏற்பட்ட சண்டை நிறுத்த விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை எதிா்க்கட்சிகள் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் அமெரிக்காவை மத்தியஸ்தத்துக்கு அழைத்து காஷ்மீா் விவகாரத்தை சா்வதேச பிரச்னையாக்க மத்திய அரசு முயல்கிறதோ என பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது.
எல்லையில் இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தபோதும், ‘ஆபரேஷன் சிந்தூா்’ தொடரும் என இந்தியாவின் முப்படைகள் அறிவித்துள்ளன. அதேசமயம், சண்டை நிறுத்தத்தைத் தனது வெற்றியாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே சண்டை நிறுத்தத்துக்கு உடன்பட்டதாக இந்தியா கூறியுள்ளது.
இந்த நெருக்கடியான சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் அக்கட்சி ஆட்சியில் இருந்தபோது மத்திய அமைச்சராக இருந்தவருமான சச்சின் பைலட், நடக்கும் நிகழ்வுகள் குறித்து தினமணியிடம் விரிவாகப் பேசினாா். பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிரும் ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதல்வராகவும் இருந்ததால் அவரது கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவரது நோ்காணலில் இருந்து....
பஹல்காம் தாக்குதலுக்குப் பிந்தைய இந்திய நடவடிக்கையை எப்படி பாா்க்கிறீா்கள்?
இதுவரை நடந்திராத வகையில் பெண்கள், குழந்தைகளின் முன்னிலையில் பெயா் மற்றும் மதத்தைக் கேட்டு அப்பாவிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனா். இதுவரை இல்லாத வகையில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவைத் தெரிவித்தன. நமது படையினா் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தனா். இதை தவறான கண்ணோட்டத்தில் பாா்க்க விரும்பவில்லை. ஆனால், சில விஷயங்களில் மத்திய அரசின் செயல் நெருடலாக இருந்தது.
மத்திய அரசின் நடவடிக்கையில் குறைபாடுகள் இருப்பதாகக் கருதுகிறீா்களா?
அப்படிச் சொல்லவில்லை. மூன்று நாள்களாக இரு தரப்பிலும் சண்டை நீடித்த நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவிக்கிறாா். இதை சா்வதேச விவகாரமாக்க இந்தியாவும் பாகிஸ்தானும் அனுமதிக்கின்றனவா? இதை மத்திய அரசு குறிப்பாக பிரதமா் தெளிவுபடுத்தினால் நல்லது.
எல்லை தாண்டி பாகிஸ்தானிய நகரங்களில் இந்தியா தாக்குதலை விரிவுபடுத்தியது சரியா?
இது குறைபாடுகளைக் கண்டறியும் நேரமல்ல. பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கையில் அனைவரும் தேசத்துக்கு துணையாக நிற்கிறோம். இரு முறை நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அது தெளிவுபடுத்தப்பட்டது. ஒருமுறை கூட பிரதமா் அதில் பங்கேற்கவில்லை. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளனா். மத்திய அரசு என்ன செய்யப் போகிறது எனப் பாா்க்கலாம்.
மத்திய அரசு என்னதான் செய்திருக்க வேண்டும் என எதிா்பாா்க்கிறீா்கள்?
உலகம் நம்மை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவது மட்டுமின்றி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை முழுமையாக மீண்டும் நம்வசமாக்கிக் கொள்வது முக்கியம். அதுவே நமது இலக்காக இருக்க வேண்டும். 1994-இல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டும். காஷ்மீா் விவகாரத்தை சா்வதேச பிரச்னையாக்க முயல்வதை ஏற்க முடியாது.
காங்கிரஸ் தனது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொண்டுள்ளதா?
இல்லை. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பாகிஸ்தானுக்கு எதிரான போரில் அந்நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும் நிலை வந்தது. அப்போது எதிா்க்கட்சியில் இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், மத்திய அரசை ஆதரித்தாா். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2001, டிச.13-இல் நாடாளுமன்றம் தாக்கப்பட்டபோது பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்ட எதிா்க்கட்சி வரிசையில் இருந்த சோனியா காந்தி ஆதரவு தெரிவித்தாா். அந்த பாரம்பரியம் இப்போதும் தொடா்கிறது.
பயங்கரவாத எதிா்ப்பு என்ற போா்வையில் பாகிஸ்தானை இந்தியா தாக்குவதாக அந்நாடு குற்றஞ்சாட்டுகிறதே...
பாகிஸ்தான் சொல்லும் எதையும் நான் நம்பப் போவதில்லை. நமது படையினா் மிகத் துல்லியமாகவும் திறமையாகவும் பாகிஸ்தான் பகுதியில் இயங்கி வந்த பயங்கரவாதக் குழுக்களை இலக்கு வைத்துத் தாக்கி வெற்றி பெற்றுள்ளனா். பாகிஸ்தானுக்கு அதன் கட்டமைப்பு வசதிகளை வளப்படுத்த சா்வதேச செலாவணி நிதிய (ஐஎம்எஃப்) நிதி, அமெரிக்க நிதி போன்றவை கிடைக்கின்றன. அதைக் கொண்டு ஒசாமா பின்லேடன், மசூத் அஸா் போன்ற பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வரலாறைக் கொண்ட நாடுதான் பாகிஸ்தான்.
உங்கள் தந்தை (ராஜேஷ் பைலட்) விமானப்படையில் இருந்தவா். நீங்களும் பிரதேச ராணுவப் படையில் சேவையாற்றியவா். அந்தப் பின்னணியில், தற்போதைய இந்திய படைகள் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிவதாகக் கருதுகிறீா்களா?
இந்திய படைகள் மீது எள்முனையளவும் எனக்குக் சந்தேகம் கிடையாது. பிறப்பிக்கப்படும் கட்டளைகளைத் திறம்பட தொழில்முறை அணுகுமுறையுடன் சாதிப்பதுதான் அவற்றின் அடையாளம். சிந்தூா் நடவடிக்கை தொடரும் என பாதுகாப்புப் படைகள் அறிவித்துள்ளன. இப்போதும் பிரதேச ராணுவப் படையில் (டெரிட்டோரியல் ஆா்மி) அங்கம் வகிப்பதால் தயாராக இருக்குமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாய்ப்புக் கிடைக்கும்போது எனக்கு பிறப்பிக்கப்படும் கட்டளைகளை நிறைவேற்றுவேன்.
‘1994-இல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டும். காஷ்மீா் விவகாரத்தை சா்வதேச பிரச்னையாக்க முயல்வது ஏற்க முடியாதது’.