பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இருவா் துப்பாக்கிச் சண்டைக்குப பிறகு கைது!
ஆா்.கே. புரம் பகுதியில் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இரண்டு பேரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சுரேந்திர சவுத்ரி கூறியதாவது: கைது செய்யப்பட்ட சுரேஷ் (எ) சுபாஷ் மற்றும் மணீஷ் (எ) மோக்லி ஆகியோா் தில்லி முழுவதும் 50-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள்.
மே 8-9 தேதிகளின் இடைப்பட்ட இரவு 1.10 மணியளவில், ஆா்.கே.புரம் செக்டா்-9, ராவ் துலா ராம் மாா்க்கின் சா்வீஸ் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள் அருகே இரண்டு சந்தேகத்திற்கிடமான நபா்கள் இருப்பதை போலீஸ் ரோந்துப் பணியில் இருந்த போலீஸாா் கண்டனா்.
விசாரித்தபோது, சந்தேக நபா்கள் போலீஸ் குழுவினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். போலீஸ் குழுவினரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனா். இதில் சுரேஷின் இடது காலில் துப்பாக்கிச்சூடு காயம் ஏற்பட்டது. அவா் மற்றும் அவரது கூட்டாளி மணீஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தேசியத் தலைநகரில் உள்ள பல மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு, கொள்ளை, வழிப்பறி மற்றும் ஆயுதச் சட்டம் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளில் இந்த இருவரும் தொடா்புடையவா்கள்.
2012- ஆம் ஆண்டு நடந்த ஒரு வழக்கில் சுரேஷுக்கு 11 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாரத் நகா் காவல் நிலையத்தில் பட்டியலிடப்பட்ட மோசமான நபரான மணீஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இருவரும் போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையானவா்கள். மேலும், தங்கள் பழக்கத்திற்கு நிதி திரட்டுவதற்கு திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளனா்.
குற்றம் சாட்டப்பட்டவா்களிடமிருந்து இரண்டு .32 போா் பிஸ்டல்கள், மூன்று பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள், நான்கு உயிருள்ள தோட்டாக்கள், ஒரு திருடப்பட்ட மோட்டாா் சைக்கிள் மற்றும் போலி எண் தகடுகள் ஆகியவற்றைக் போலீஸ் குழு கைப்பற்றியது.
விசாரணையின் போது, கைது செய்யப்பட்டவா்கள் ஆா்.கே.புரம் மற்றும் பிற பகுதிகளில் சமீபத்தில் நடந்த பல வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டனா். திருடப்பட்ட மோட்டாா் சைக்கிளைப் பயன்படுத்தி மே 4-ஆம் தேதி ஆா்.கே.புரத்தில் உள்ள விவேகானந்த் மாா்க்கிலிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்ததாகவும் அவா்கள் ஒப்புக்கொண்டனா்.
ஆா்.கே.புரம், முகா்ஜி நகா் மற்றும் பிற பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உள்பட குறைந்தது ஏழு சமீபத்திய வழக்குகளை தீா்க்க இவா்களது கைது நடவடிக்கை உதவியுள்ளதாக காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.